நாகை: VAO தலையில் கல்லை போட்டு கொலை... திருநங்கைகள் இருவர் கைது!
Nagapattinam VAO Murder case Transgender arrested
நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்த ராஜாராமன் (37) நாகை அருகே திருவாய்மூர் வட்டத்தில் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். திருமணமான இவர், ஒரு மகனை பெற்றிருந்தார்.
கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சியில் பணிபுரிந்தபோது லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ராஜாராமனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் சில மாதங்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் திருவாய்மூரில் பணியைத் தொடங்கினார்.
சமீபத்தில் அந்த வழக்கில் விசாரணைக்காக ராஜாராமன் நாகைக்கு சென்றார். மாலை வீட்டுக்கு திரும்பும் வழியில் காணாமல் போனார். இரவு முழுவதும் வீட்டுக்குத் திரும்பாததால் குடும்பத்தினர் தேடத் தொடங்கினர்.
அடுத்த நாள் காலை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில், முகம் மற்றும் தலையில் கடுமையான காயங்களுடன் ராஜாராமன் இறந்து கிடந்தார். தகவலறிந்த வெளிப்பாளையம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கொலை, தற்கொலை உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது. ராஜாராமனின் மரணத்திற்கு திருநங்கைகள் நிவேதா மற்றும் ஸ்ரீகவி காரணம் என கண்டறியப்பட்டது.
அன்றிரவு ராஜாராமன் போதையில் செல்லூர் பகுதியில் படுத்திருந்தபோது, இவரது செல்போன், மோதிரம், பணத்தை பறிக்க முயன்ற நிவேதா மற்றும் ஸ்ரீகவி, அவர் எதிர்த்ததால் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர். ராஜாராமன் கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Nagapattinam VAO Murder case Transgender arrested