நாகை: விசாரணைக்கு சென்ற VAO மர்ம மரணம்!
Nagapattinam VAO Murder
நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் (37) நாகை அருகே உள்ள திருவாய்மூர் ஊராட்சி வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சியில் பணிபுரிந்தபோது, லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவர் சில மாதங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதன்பின் மீண்டும் திருவாய்மூர் வி.ஏ.ஓ. பதவியில் பணியைத் தொடர்ந்தார்.
இந்நிலையில், லஞ்ச வழக்கில் நீதிமன்ற விசாரணைக்காக நேற்று ராஜாராமன் தனது இருசக்கர வாகனத்தில் நாகைக்கு சென்றார். மாலை நேரத்தில் வீடு திரும்ப புறப்பட்ட அவர், இரவு தாமதமாகியும் வரவில்லை. இதனால் கவலை அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் பயனின்றி போனது.
இன்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாராமன் முகம், தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராஜாராமன் விபத்தில் சிக்கி இறந்தாரா, தற்கொலை செய்தாரா அல்லது யாராவது தாக்கி கொலை செய்தார்களா என்பதை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.