மோன்தா புயல்: சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
Montha Cyclone Rain tamilnadu
வங்கக் கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மோன்தா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் உருவாகியுள்ள நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய ஒன்பது துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள மோன்தா புயல் தற்போது சென்னையிலிருந்து கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் மேற்குத் திசை நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த சில நாட்களில் வடக்கு தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும், ஏற்கனவே கடலில் சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வானிலை துறை அறிவுறுத்தியுள்ளது. புயலின் தீவிரம் அதிகரிக்கக்கூடியதால், கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
English Summary
Montha Cyclone Rain tamilnadu