மதுரை வழியாக தாம்பரத்துக்கு நவீன பயணம்… அம்ரித் பாரத் ரெயில் அறிமுகம்...!
modern journey Tambaram via Madurai Amrit Bharat train introduced
தென்னக ரெயில்வே பயணிகளுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு செல்லும் புதிய வாராந்திர ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் சேவை விரைவில் தொடங்க உள்ளது.
வந்தே பாரத் ரெயிலின் நவீன வடிவமைப்பை கொண்டாலும், ஏ.சி. வசதி இல்லாத, பொதுமக்களுக்கு ஏற்ற கட்டணத்தில் பயணிக்க வசதியான இந்த ரெயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, பழனி, கோவை, சேலம் வழியாக மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான நியூ ஜல்பைகுரி (டார்ஜிலிங் அருகில்) வரை ஓடும் அம்ரித் பாரத் ரெயில் கடந்த வாரம் வெற்றிகரமாக சேவையை தொடங்கியது.
இந்த நிலையில், திருவனந்தபுரம் சென்டிரலிலிருந்து நெல்லை வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும் புதிய அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் (வண்டி எண் 16121 / 16122) இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது.
திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இந்த ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.இந்த ரெயில், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர் வழியாக மதியம் 1.20 மணிக்கு நெல்லை சந்திப்பை அடைந்து, 1.25 மணிக்கு புறப்படும்.
அதன் பின் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக பயணித்து, இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தில் வந்து சேரும்.இந்த ரெயிலில் 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 8 முன்பதிவு இல்லாத உட்காரும் பெட்டிகள்,2 மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டு பெட்டிகள்,ஒரு உணவுக்கூட பெட்டி என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த புதிய சேவைக்கான இயக்க தினங்கள் மற்றும் விரிவான நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பதிலாக, தென்னக ரெயில்வேயின் இந்த புதிய ‘அம்ரித் பாரத்’ சேவை, தென் இந்திய பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.
English Summary
modern journey Tambaram via Madurai Amrit Bharat train introduced