ஆடுகளை ஆட்டைய போட்டு சொகுசு காரில் கடத்திய தம்பதி: சினிமா பாணியில் ஆற்றுக்குள் குதித்து பிடித்த போலீசார்; மானாமதுரையில் பரபரப்பு..!
Manamadurai police chased and caught a couple who stole sheep in a luxury car
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, எமனேஸ்வரத்தில் 05 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சொகுசு காரில் ஏற்றிச் செல்வதாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மானாமதுரை அருகே ஆலம்பச்சேரி விலக்கில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு சொகுசு காரை, போலீசார் நிறுத்தியும் அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. உடனடியாக போலீசார் மானாமதுரை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் அங்கிருந்த போலீசார் காவல் நிலையம் முன்பு காரை மறிக்க முயன்ற நிலையில், அப்போதும் குறித்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து காரை சினிமா பாணியில் பின்தொடர்ந்து போலீசார் விரட்டிச் சென்றனர்.

நகராட்சி அலுவலகம் அருகே கார் சென்ற போது, போலீசாரின் வாகனம் வழிமறித்துள்ளது. அப்போது அந்த காரில் இருந்த ஆணும், பெண்ணும் அருகில் வைகை ஆற்றில் குதித்து தப்பி ஓட முயன்றுள்ளனர். போலீசாரும் ஆற்றுக்குள் குதித்து அவர்களை விரட்டிப் பிடித்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்டவர்கள் மதுரை ஆண்டார்கொட்டாரத்தை சேர்ந்த காளீஸ்வரன் (35), அவரது மனைவி முத்துமாரி (33) என தெரிய வந்துள்ளது. இதையடுத்து பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து திருடப்பட்ட ஆடுகள், கார் மற்றும் தம்பதியை ஒப்படைத்துள்ளதோடு, போலீசார் தம்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியுள்ளது.
English Summary
Manamadurai police chased and caught a couple who stole sheep in a luxury car