தூய்மை பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைப்பதா? வெடித்த சர்ச்சை! தவெக எம்.எல்.ஏ அலுவலக விழாவில் நடந்தது என்ன?
Making sanitation workers clear away used leaf plates Controversy erupts What happened at the TVK MLA office event
மதுரவாயல் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ ரேவந்த் சரணின் அலுவலக திறப்பு விழாவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பயன்படுத்தி எச்சில் இலைகளை எடுக்க வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், எம்.எல்.ஏ அலுவலக நிகழ்ச்சிக்காக மாநகராட்சி வார்டுகளில் தூய்மை பணியில் ஈடுபட வேண்டிய ஊழியர்களை அழைத்து வந்து எச்சில் இலைகளை அகற்ற வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட ரேவந்த் சரண் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், மதுரவாயலில் தனது புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தை அவர் திறந்துள்ளார்.
இந்த அலுவலக திறப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் பங்கேற்று புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உள்ளிட்ட சென்னையை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அலுவலக திறப்பு விழா முடிந்த பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு அருகே உள்ள சென்னை குடிநீர் வாரிய அலுவலக வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அங்கு ஏராளமானோர் உணவு சாப்பிட்ட நிலையில், உணவுக்குப் பிறகு எச்சில் இலைகளை எடுப்பதற்கும், அப்பகுதியில் சேர்ந்த குப்பைகளை அகற்றுவதற்கும் சென்னை மாநகராட்சியின் 11-வது மண்டலத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வழக்கமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தூய்மை பணியில் ஈடுபட வேண்டிய மாநகராட்சி ஊழியர்கள், அந்த பணிகளை மேற்கொள்ள விடாமல் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கு உணவு சாப்பிட்டவர்கள் விட்டுச் சென்ற எச்சில் இலைகளை எடுக்க வைத்ததாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அந்த காட்சிகளை பகிர்ந்து வரும் பலரும், ஒரு அரசியல் கட்சியின் எம்.எல்.ஏ நடத்திய நிகழ்ச்சிக்காக மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே கடுமையான பணிச்சுமைக்கு மத்தியில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களை அரசியல் நிகழ்ச்சிகளில் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா என்பது கட்சி சார்ந்த நிகழ்ச்சியா அல்லது அரசு சார்ந்த நிகழ்ச்சியா என்றும், அப்படியிருக்கும்போது மாநகராட்சி ஊழியர்களை அங்கு பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டது யார் என்றும் சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்களை எம்.எல்.ஏ நிகழ்ச்சியில் பயன்படுத்தியது யாருடைய உத்தரவின் பேரில் நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மதுரவாயல் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் பூதாகரமாகியுள்ளது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், ரேவந்த் சரணின் புதிய எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த், ரேவந்த் சரணின் செயல்பாடுகளை பாராட்டினார்.
மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரண் மிகவும் எளிமையானவர் என்றும், அவருக்கு சொந்தமாக திரையரங்குகள் இருந்தாலும் மக்களை எளிமையான முறையில் அணுகி வருவதாகவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
பதவியேற்ற 40 நாட்களிலேயே தொகுதியில் மக்கள் நலப் பணிகளை ரேவந்த் சரண் சுறுசுறுப்பாக செய்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், “தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தவறு செய்ய மாட்டோம். அப்படித்தான் தமிழக முதலமைச்சர் விஜய் எங்களை வழிநடத்தி வருகிறார். மக்களின் கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்ப்பதே எங்களது நோக்கம்” என்று அமைச்சர் ஆனந்த் பேசினார்.
சமூக வலைதளங்கள், இணையதளம், வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் போன்ற பல்வேறு வசதிகள் இருந்தாலும், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் வாரந்தோறும் தங்களது தொகுதி மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மக்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டு அவற்றுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே முதலமைச்சர் விஜய்யின் உத்தரவு என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருபுறம் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த தவறும் செய்ய மாட்டார்கள் என்று அமைச்சர் ஆனந்த் பேசிய அதே நிகழ்ச்சியில், மறுபுறம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் எச்சில் இலைகளை எடுக்க பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மதுரவாயல் எம்.எல்.ஏ ரேவந்த் சரண் தரப்போ அல்லது சென்னை மாநகராட்சி நிர்வாகமோ என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பதுதான் தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Making sanitation workers clear away used leaf plates Controversy erupts What happened at the TVK MLA office event