"சேர்ந்தே இருப்பது காங்கிரசும் கலகமுமா?" மாணிக்கம் தாகூருக்கு குடைச்சல் கொடுக்கும் மாவட்ட தலைவர்கள்... பெரிய ஆயுதத்தை கையிலெடுக்கும் தாகூர்!
Are the Congress and discord inseparable District leaders give Manickam Tagore a hard time Tagore prepares to wield a major weapon
‘சேர்ந்தே இருப்பது காங்கிரசும் கலகமும்’ என்று சொல்லும் அளவுக்கு, புதிய மாநில தலைவர் நியமிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியும் கோஷ்டி மோதலும் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் மாநில தலைவர்களின் ஆதரவுடன் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள், புதிய மாநில தலைவரான மாணிக்கம் தாகூருக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளதாகவும், இதனால் அதிருப்தியில் இருக்கும் அவர் மாவட்ட தலைவர்கள் பட்டியலில் அதிரடி மாற்றத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கதர் கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றார். அவரது தலைமையில் கட்சி செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை.
திமுக கூட்டணியில் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மாநில தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தனது சொந்த தொகுதியான ஸ்ரீபெரும்புதூரிலேயே தோல்வியை சந்தித்தது கட்சிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
தேர்தல் தோல்விக்கு பிறகு, தொகுதி மக்களின் நலனுக்காகவும் அரசியல் பொறுப்புணர்வின் அடிப்படையிலும் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான விவாதம் தீவிரமடைந்தது.
அப்போது மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரின் பெயர்கள் மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் பலமாக அடிபட்டன. மேலும் சில மூத்த தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டு மாநில தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சித்ததாக கூறப்பட்டது.
ஆனால் கட்சிக்குள் இளைஞர்களின் ஆதரவை அதிகமாக பெற்றவர் என்ற அடிப்படையில் மாணிக்கம் தாகூரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாநில தலைவராக பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர், கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாடு காங்கிரஸில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவர்கள் நியமனம் நடைபெற்றது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான இடங்களில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த நியமனங்கள் முறையான உட்கட்சி தேர்தல் மூலம் நடைபெறவில்லை என்றும், கட்சியில் செல்வாக்கு கொண்ட கோஷ்டி தலைவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
முன்னாள் மாநில தலைவர்களான கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை மற்றும் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆகியோரின் ஆதரவாளர்களே பெரும்பாலான மாவட்டங்களில் தலைவர்களாக நியமிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மாணிக்கம் தாகூர் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், பல மாவட்ட தலைவர்கள் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. புதிய மாநில தலைவரின் உத்தரவுகளை சிலர் கண்டுகொள்ளவில்லை என்றும், அவருடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் தயக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமின்றி, சில மாவட்ட தலைவர்கள் மாணிக்கம் தாகூர் நேரடியாக செல்போனில் அழைத்தாலும் அந்த அழைப்பை கூட எடுப்பதில்லை என்று அவரது ஆதரவாளர் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மாநில தலைவராக பொறுப்பேற்ற ஒருவரின் தொலைபேசி அழைப்பை மாவட்ட தலைவர்களே புறக்கணிப்பது மாணிக்கம் தாகூர் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் கோபத்தில் இருக்கும் மாணிக்கம் தாகூர் தரப்பு, மாவட்ட தலைவர்கள் பட்டியலில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், முன்னாள் மாநில தலைவர்கள் சிலர் தங்களது ஆதரவாளர்களான மாவட்ட தலைவர்களை பயன்படுத்தி மாணிக்கம் தாகூருக்கு எதிராக கட்சிக்குள் கலகத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
மாநில தலைவராக பதவியேற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், தனக்கு எதிராக சில மாவட்ட தலைவர்கள் செயல்படுவதை அறிந்த மாணிக்கம் தாகூர், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு காங்கிரஸில் தற்போது நிலவும் சூழல், மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்களால் ஏற்படுவதாக கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பான விவரங்களை அவர் தேசிய தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விதிகளின்படி புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் ஆறு மாதங்களுக்குள் முறையாக செயல்படவில்லை என்றால் அவர்களை பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த விதியை பயன்படுத்தியே செயல்படாத மாவட்ட தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து அகற்ற மாணிக்கம் தாகூர் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களுக்கு பதிலாக இளைஞர்கள், களத்தில் தீவிரமாக பணியாற்றுபவர்கள் மற்றும் புதிய மாநில தலைமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட தயாராக இருப்பவர்களை மாவட்ட தலைவர்களாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கதர் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒருபுறம் தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் இருக்கும் நிலையில், மறுபுறம் புதிய மாநில தலைவருக்கும் மாவட்ட தலைவர்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மாணிக்கம் தாகூர் திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்களை அதிரடியாக மாற்றுவாரா, முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்கள் பதவியில் இருந்து அகற்றப்படுவார்களா அல்லது டெல்லி தலைமை தலையிட்டு சமரசம் செய்யுமா என்பதுதான் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரங்களில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
English Summary
Are the Congress and discord inseparable District leaders give Manickam Tagore a hard time Tagore prepares to wield a major weapon