வாக்காளர் பட்டியலில் பெரும் மாற்றம்: 97 லட்சம் பேர் நீக்கம், 15 லட்சம் பேர் புதிய சேர்ப்பு...!
Major changes voter list 97 lakh people removed 15 lakh new additions
தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் கமிஷன் “எஸ்.ஐ.ஆர்.” எனப்படும் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மாநிலம் முழுவதும் தீவிரமாக மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 19-ந்தேதி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.அந்த பட்டியலில் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் நீக்கப்பட்டு, தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளது.
இதில் மட்டும் 66 லட்சம் பேர் இடம் பெயர்ந்து சென்றவர்களாக பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களை இணைக்கவும், புதிய வாக்காளர்களை பதிவு செய்யவும் இந்திய தேர்தல் கமிஷன் கடந்த டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தி செயல்படுத்தியது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களும் இந்தப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர். திமுகவிற்கு 68 ஆயிரத்து 260, அதிமுகவிற்கு 67 ஆயிரத்து 286, பாஜகவிற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 843 தேர்தல் முகவர்கள் உள்ளனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து பெற்று, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்தனர்.
மேலும்,விடுபட்டோர் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்க்க ஒரு மாத கால அவகாசம், அதாவது ஜனவரி 18-ந் தேதி வரை தேர்தல் கமிஷன் வழங்கியிருந்தது. ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, கடந்த 16-ந் தேதி வரை 18 வயது நிறைவடைந்த தகுதியுள்ள 12 லட்சத்து 80 ஆயிரத்து 668 பேர் படிவம் 6, 6ஏ மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், மரணமடைந்த 32 ஆயிரத்து 388 பேரின் பெயர்களை நீக்க அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ஐ சமர்ப்பித்துள்ளனர்.இந்த பெயர் சேர்க்கும் பணிக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்திய நிலையில், தேர்தல் ஆணையம் வரும் 30-ந்தேதி வரை அவகாசம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிந்த பின் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதேபோல், பட்டியலில் இருந்து பெயர் நீக்க 87 ஆயிரத்து 579 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
English Summary
Major changes voter list 97 lakh people removed 15 lakh new additions