மகாளய அமாவாசை..கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்!
Mahalaya Amavasya People bathing in the sacred waters of the sea and offering tarpanam to their ancestors
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகாளய அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பின்னர் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் மகாளய அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள்.
அவர்கள் கடலில் புனித நீராடினார்கள். அதன் பிறகு ஈரத் துணியுடன் கரைக்கு வந்துகடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் ஓதுவார்கள் மூலம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள், பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.
பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
மகாளய அமாவாசையை யொட்டி இன்று அதிகாலை முதல் மாலை வரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தார்கள்.
மகாளய அமாவாசையையொட்டி பகவதி அம்மன் கோவிலில் காலை11மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம்,வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. வடக்கு பிரதான நுழைவுவாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.
மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும் இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்கிறார்கள்.கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் போலீசார்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
English Summary
Mahalaya Amavasya People bathing in the sacred waters of the sea and offering tarpanam to their ancestors