வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி புதிய யுக்தி! 160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்..உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்!
Edappadi Palaniswami new strategy in candidate selection Edappadi Palaniswami U turn in 160 seatsThe secret told by the former intelligence officer
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் விறுவிறுப்பாகி வருகிறது. இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் சில முக்கிய நடவடிக்கைகள் கட்சியின் பாரம்பரிய நடைமுறைகளையே மாற்றியமைக்கும் வகையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக அதிமுக போன்ற பெரிய கட்சிகளில் வேட்பாளர் தேர்வு என்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நடைபெறும். ஆனால் இந்த முறை அந்த நடைமுறையில் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பேர் கொண்ட உத்தேச பட்டியலை மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து பெற்ற கட்சி தலைமை, அதில் பெரிய அளவில் மாற்றங்களை செய்துள்ளதாக தகவல். மாவட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் சில சீனியர் தலைவர்களின் பரிந்துரைகளை நிராகரித்து, கட்சி தலைமை ஏற்கனவே முடிவு செய்திருந்த பெயர்களை அந்த பட்டியலில் சேர்த்து மீண்டும் மாவட்ட நிர்வாகிகளிடம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை காரணமாக, தங்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதாக சில மண்டல அளவிலான முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றங்களுக்கு பின்னால் 2021 சட்டசபைத் தேர்தலின் அனுபவங்கள் முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் விருப்பப்படி பல்வேறு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், பின்னர் நடைபெற்ற ஆய்வுகளில் சிலர் வலிமையற்ற வேட்பாளர்களை பரிந்துரைத்து உள்ளடி அரசியலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலை தவிர்க்கும் வகையில், வேட்பாளர் தேர்வை முழுமையாக தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்க, உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் உயரதிகாரியின் தலைமையில் ரகசிய ஆய்வு குழு அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த குழு கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல தொகுதிகளில் ஆய்வு நடத்தி, மக்களின் எதிர்பார்ப்புகள், சமூக சமநிலை, வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு போன்ற விவரங்களை தொகுத்து தலைமையிடம் சமர்ப்பித்ததாக தகவல்.
இந்த ஆய்வு தரவுகளின் அடிப்படையில் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட சிபாரிசுகளை விட களநிலை மற்றும் வெற்றி வாய்ப்பை அடிப்படையாக கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்யும் எடப்பாடி பழனிசாமியின் இந்த புதிய அணுகுமுறை அதிமுகவில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனியர் தலைவர்களின் ஆதிக்கத்தை குறைத்து, தலைமையிடம் நம்பிக்கை கொண்டவர்களும் வெற்றி வாய்ப்புள்ள இளம் தலைமுறையினரும் முன்னிலைப்படுத்தப்படுவது அதிமுக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள் தேர்தல் களத்தில் அதிமுகக்கு எவ்வாறு பலன் அளிக்கும் என்பது வரவிருக்கும் நாட்களில் தெரியவரும்.
English Summary
Edappadi Palaniswami new strategy in candidate selection Edappadi Palaniswami U turn in 160 seatsThe secret told by the former intelligence officer