முக்குலத்தோர் வாக்குகளை இலக்கு! ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது!
Targeting the votes of the Mukulathor Stalin big assignment to OPS The field is about to change
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தென் மாவட்ட அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. குறிப்பாக அதிமுகவுக்கு பாரம்பரிய ஆதரவாக கருதப்படும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கைப்பற்றும் நோக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை (ஓபிஎஸ்) திமுக தனது பக்கம் இணைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எம்.ஜி.ஆர் காலம் முதல் அதிமுகவுக்கு முக்குலத்தோர் சமூக மக்கள் பெரும் ஆதரவாக இருந்து வருகின்றனர். அந்த ஆதரவை ஜெயலலிதாவும் தக்கவைத்திருந்தார். அதனால் தான் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் போன்ற முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களின் செல்வாக்கு அதிமுகவில் அதிகமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவியுடன் ஏற்பட்ட விரிசலுக்கு பிறகு, தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதா ஓபிஎஸை முன்னிறுத்தினார். இதுவே பின்னர் அதிமுகவில் பல்வேறு அரசியல் மோதல்களுக்கு காரணமாக அமைந்தது.
இப்போது அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்திருக்கும் நிலையில், ஓபிஎஸ் திமுக பக்கம் சென்றிருப்பது தென் மாவட்ட அரசியலில் புதிய சமநிலையை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் முக்குலத்தோர் வாக்குகளை சிதறாமல் திமுக பக்கம் திருப்புவது என்ற முக்கிய பொறுப்பு ஓபிஎஸ்க்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முக்குலத்தோர் சமூகத்தில் அதிருப்தி உள்ளது என்ற கணக்கை திமுக போடுகிறது. அந்த மனநிலையை பயன்படுத்திக் கொள்ளவே ஓபிஎஸை தென் மாவட்டங்களில் தீவிர பிரசாரத்திற்கு களமிறக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திமுக அதிகாரப்பூர்வமாக தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்குமுன் தென்காசி மாவட்டத்தில் இருந்து ஓபிஎஸ் தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். இந்த பிரசாரம் நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் போன்ற முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு விரிவடைய உள்ளது.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் சுமார் 3.42 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் வெறும் 99 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்த வாக்கு வித்தியாசத்தை எடப்பாடி எதிர்ப்பு மனநிலை என திமுக கணக்கிடுகிறது.
ஆனால் அந்த அரசியல் சூழல் இன்றும் தொடர்கிறதா? டிடிவி தினகரனின் செல்வாக்கை ஓபிஎஸால் கடந்து செல்ல முடியுமா? அல்லது சசிகலாவின் அரசியல் மீள்பிரவேசம் இந்த சமன்பாட்டை மாற்றுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
எதுவாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் திமுக எவ்வளவு வெற்றி பெறுகிறது என்பது ஓபிஎஸின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
Targeting the votes of the Mukulathor Stalin big assignment to OPS The field is about to change