குண்டர் சட்ட உத்தரவில் விதிகளை மீறினால் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும்.! - Seithipunal
Seithipunal


தென்காசியை சேர்ந்த ஜெயராமன் என்பவர், விவசாயிகளுக்கு ஆதரவாக நான்கு வழிச்சாலை திட்டத்தை வேறு வழித்தடத்தில் நிறைவேற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார். 

இதனால் ஜெயராமன் தென்காசி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி சுனிதா, தன் கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு, ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டி, உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ”சென்னை உயர் நீதிமன்ற மற்றும் மதுரைக் கிளையில் தினமும் ஏராளமான ஆட்கொணர்வு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றனர். இந்த வழக்குகள் நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு பிறகு விசாரணை செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

தமிழகத்தில்தான் அதிக குண்டர் சட்டம் பிறப்பிக்கப்படுவதாக தேசிய குற்றபுலனாய்வு பிரிவின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. குண்டர் சட்டம் போதைப் பொருள் கடத்தல், மணல் கடத்தல் உட்பட ஒன்பது விதமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பிறப்பிக்கப்படுகிறது. 

உயர் நீதிமன்ற கிளையில் குண்டர் சட்டத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் 31 தேதி வரை ரத்து செய்யக் கோரி 961 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுவில், 517 வழக்குகளில் தீர்வு காணப்பட்ட நிலையில், 445 வழக்குகளில் குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு, 72 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதில், ஒரு வழக்கில் கூட குண்டர் சட்டம் உறுதி செய்யப்படவில்லை. இதுவரை 86 சதவீத வழக்குகளில் குண்டர் சட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த வழக்கில் திருமங்கலம் - ராஜபாளையம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மனுதாரரின் கணவர் மீது குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுதாரரின் கணவர் மீதான குண்டர் சட்டம் தற்போது ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு நான்கு வாரத்தில் அரசு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த உத்தரவை கருத்தில் கொண்டு அரசு குண்டர் சட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். குண்டர் சட்ட உத்தரவுகளில் அரசின் சட்ட விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் ஒவ்வொரு வழக்கிலும் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court warned tamilnadu government for gundas act


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->