அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்காததே காரணம் - மதுரை ஆதினம் பேட்டி.!
madurai adheenam press meet about election
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான அதிமுக ஒரு இடங்களிலும் வெற்றிபெறாமல் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், மதுரை ஆதீனத்தின் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
"தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அனைத்து கட்சிகளும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளன. பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழகத்தோடு இணைக்க வேண்டும். அப்போதுதான் மீன்வளம் அதிகரிக்கும்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி, தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரம் பேசப்படுகிறது. எனவே எல்லா காலக்கட்டத்திலும் அதுகுறித்து குரல் எழுப்ப வேண்டும். இலங்கை தமிழர்கள் மற்றும் கச்சத்தீவு என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன்.
அதன்படி பிரதமர் மோடியை சந்தித்து இந்த கோரிக்கைகளை விடுக்க உள்ளேன். பா.ஜனதா கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். காமராஜர் தோல்வியுற்றபோது, நாம் தோற்று விட்டோமே என கட்சிக்காரர்கள் கூறினார்கள். அதற்கு காமராஜர், இதுதான் ஜனநாயகம் என பதில் அளித்தார்.
பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. ஆனால் மோடி, எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பாஜகாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதற்காக அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.
பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அழுத்தியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறி இருப்பார்கள். ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பு. பாஜகாவுக்காக நான் பிரசாரங்களில் ஈடுபட்டதில்லை. இந்த தேர்தலில் பாஜகாவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியுள்ளது. அ.தி.மு.க. தனது கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. ஆனால், பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்கள் கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளார்கள்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
madurai adheenam press meet about election