இனி அர்ஜித் சிங் குரல் ஒலிக்காதா..? பத்மஸ்ரீ பாடகரின் திடீர் முடிவால் இந்தியத் திரையுலகமே ஸ்தம்பிப்பு...!
Will Arijit Singh voice no longer be heard Indian film industry stunned by sudden decision Padma Shri singer
இந்தியத் திரையிசை உலகின் இதயத் துடிப்பாகத் திகழும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் அர்ஜித் சிங், இனி திரைப்படப் பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்து இசை உலகையே உலுக்கியுள்ளார்.
38 வயதே ஆகும் இவர், கடந்த 15 ஆண்டுகளாகத் தனது காந்தக் குரலால் இந்தியர்களை கட்டிப்போட்டுள்ளார். குறிப்பாக, 'ஆஷிகி 2' திரைப்படத்தின் 'தும் ஹி ஹோ' (Tum Hi Ho) பாடல் மூலம் இந்தியா முழுவதும் ஒரு 'மெலடிப் புயலை'க் கிளப்பியவர்.

தமிழில் 'நான் உன் அழகினிலே', 'அடடா என்ன அழகு' போன்ற மனதைக் கொள்ளைகொள்ளும் பாடல்களைப் பாடித் தமிழ் ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர்.அவரது கலைச்சேவையைப் பாராட்டி கடந்த ஆண்டு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.
புகழின் உச்சியில் இருக்கும் போதே, பின்னணிப் பாடகர் பணியிலிருந்து விடைபெறுவதாக அவர் எடுத்துள்ள முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "திரைப்படப் பாடல்கள் எனக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்திவிட்டன; ஒரே பாணியிலான இசையில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது.
எனது இசைப் பயணத்தில் புதிய எல்லைகளைத் தொடவும், சுயாதீன இசை (Independent Music) மற்றும் இந்திய செவ்வியல் இசையில் (Classical Music) அதிக கவனம் செலுத்தவும் விரும்புகிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திரைப்படங்களில் இனி அவரது குரல் ஒலிக்காது என்றாலும், ஒரு இசையமைப்பாளராகத் தொடர்ந்து திரையுலகில் பயணிப்பேன் என அவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், ஒரு பாடகராக அவரை இழந்தது அவரது ரசிகர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Will Arijit Singh voice no longer be heard Indian film industry stunned by sudden decision Padma Shri singer