போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி..நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி எஸ் பி அலுவலகத்தில் புகார்!
Land fraud through fake documents an elderly woman lodged a complaint at the SP office seeking action
ஒரத்தூரில் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்து விற்பனை செய்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 85 வயது மூதாட்டி மகள்களுடன் வந்து எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பட்டரைபெரும்புதூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் டி.மேரி. இவரது தந்தை ஆசிர்வாதம் என்பவருக்கு திருவாலங்காடு அடுத்த ஒரத்தூர் கிராமத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் 67 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு வாரிசுதாரரான மேரி என்பவர் பயிர் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இவருக்கு நான்கு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் மேரியின் தகப்பனார் ஆசீர்வாதம் உயிரிழந்ததையடுத்து மேரியின் சித்தப்பா மகன்களான சாம்சன், ஜான்சன், ஈசாக் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து மேரியினுடைய 67 சென்ட் நிலத்தில் பயிர் வைத்துக் கொள்கிறோம் என்று கேட்டதால் மேரி ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் மூன்று வருடம் கழித்து அந்த இடத்தை தனது மகள்களான செல்வி, விக்டோரியா, பிலோமினா மற்றும் இறந்து போன மகள் எஸ்தரின் பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுப்பதற்காக சென்று பார்த்துள்ளார். அப்போது இன்னும் மூன்று வருடம் கழித்து ஒப்படைப்பதாக கூறியதால் அதை நம்பி மேரி வந்துள்ளார். ஆனால் மூன்று வருடமாகியும் நிலத்தை திருப்பி ஒப்படைக்காததால் மேரி சென்று விசாரித்த போது சித்தப்பா மகன்கள் மூன்று பேரும் கூட்டு சேர்ந்து ஒரத்தூர் கிராமத்தில் உள்ள 67 சென்ட் நிலத்தை மோசடி செய்து போலியான ஆவணம் தயாரித்து அந்த இடத்தை அபகரித்து விட்டதாக தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 85 வயது மூதாட்டி இன்று எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். நான் இறப்பதற்குள் அந்த இடத்தை என் மகள்களுக்கு உயில் எழுதி வைக்க வேண்டும். ஆகையால் இந்த மோசடி நபர்களிடமிருந்து நிலத்தை மீட்டு வழங்க வேண்டுமென அந்த மனுவில் மூதாட்டி தெரிவித்துள்ளார். மனு மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி அலுவலகத்தில் கூறியதால் தனது மகள்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
English Summary
Land fraud through fake documents an elderly woman lodged a complaint at the SP office seeking action