இமயத்தின் மறைவால் ஸ்தம்பித்த கோலிவுட்...! பாரதிராஜாவுக்கு மரியாதை செலுத்த நாளை ஒருநாள் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து...!
Kollywood comes standstill due demise Himalayas All shootings cancelled one day tomorrow pay tribute Bharathiraja
தமிழ் திரைப்பட உலகின் திசையை மாற்றியமைத்து, கிராமத்து வாழ்வியலை வெள்ளித்திரையில் உயிர்ப்பித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக கருதப்படுகிறது.
1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, முதல் படத்திலேயே அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன் சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார். அந்தப் படத்தின் வெற்றியே தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியது.

அதனைத் தொடர்ந்து எண்ணற்ற வெற்றிப்படங்களை இயக்கி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அழியாத தடத்தைப் பதித்தார். ராதா, ராதிகா, ரேவதி உள்ளிட்ட பல திறமையான நடிகைகளை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் அவரையே சாரும்.
திரைப்படங்களை ஸ்டுடியோ சுவர்களுக்குள் மட்டுப்படுத்தாமல், கிராமங்களின் இயற்கை அழகையும், மண்ணின் மணத்தையும், மக்களின் உணர்வுகளையும் நேரடியாக வெள்ளித்திரைக்கு கொண்டு வந்த முன்னோடியாக பாரதிராஜா போற்றப்பட்டார். கிராமத்து வாழ்க்கையை கலைநயத்துடன் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்திய அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், 2004-ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பாரதிராஜாவை ஆழ்ந்த மனவேதனைக்கு உள்ளாக்கியது. அதன் பின்னர் அவரது உடல்நிலையில் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் இறுதி மூச்சை விட்டார்.
அவரது மறைவு செய்தி வெளியாகியதும் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோக அலை பரவியது.பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இயக்குநர் கே. பாக்யராஜ், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, நடிகை ராதிகா மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
மேலும், பாரதிராஜாவின் கலைப் பங்களிப்பை போற்றும் வகையில் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, தமிழ் திரைப்படத் துறையின் சார்பில் துக்கம் அனுசரிக்கும் வகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
காலம் கடந்தும் வாழும் படைப்புகளின் மூலம் தமிழர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் கலைச் சிகரமாக பாரதிராஜா விளங்குவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kollywood comes standstill due demise Himalayas All shootings cancelled one day tomorrow pay tribute Bharathiraja