கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயமடைந்தவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்!
Karur stampede incident The injured have completed treatment and returned home
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற தவெக தலைவர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் உடல்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களுடைய குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை நடத்தி வருகிறார்.
இதற்கிடையில் கூட்ட நெரிசலில் காயமடைந்த 110 பேரில், 51 பேர் குணமடைந்து அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 59 பேரில், 51 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சியில் 2 பேர், மதுரையில் 2 பேர் என மொத்தம் 4 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேரும் விரைவில் குணமடைய உயரிய சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
English Summary
Karur stampede incident The injured have completed treatment and returned home