தமிழகத்தை 300 ஆண்டுகள் ஆட்டிப்படைத்த களப்பிரர்கள்! : வேரறுத்து விரட்டியடித்த கடுங்கோன்! - Seithipunal
Seithipunal


பாண்டிய நாட்டின் இருண்ட காலம் என்பது சங்க காலத்தைத் தாண்டிய பகுதி. கி.மு. 3 முதல் கி.பி.3-ம் நூற்றாண்டு வரை தான் சங்க காலம். இந்த சங்க காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது.

அதற்கு காரணமானவர்கள் களப்பிரர்கள். இந்த களப்பிரர்கள் கர்நாடகப் பகுதியிலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் பாண்டிய மன்னர்களை வென்று தங்களது ஆளுகைக்கு கீழே மதுரையைக் கொண்டு வந்தனர்.

சங்க காலத்திற்குப் பின்னர் சுமார் 300 ஆண்டுகள் இவர்களது ஆட்சிக் காலம் மதுரையில் நீடித்தது. இவர்களது ஆட்சியைப் பற்றியோ, அப்போதைய பாண்டிய நாட்டின் நிலைமையைப் பற்றியோ தெளிவான எந்த தகவல்களும் ஆய்வாளர்களுக்கு கிடைக்கவில்லை.


    
ஆனால் நமது சமயக் கலாச்சாரங்களில் பெரும் மாறுதலை இந்தக் களப்பிரர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. சமணமும், பௌத்தமும் தத்தமது வகையில் மிகுந்த செல்வாக்கினை இவர்களது ஆட்சிக் காலத்தில் பெற்றிருக்கிறது. வைதீக மதங்களுக்கு எதிரான போக்கை களப்பிரர்கள் வளர்த்திருக்கிறார்கள்.
 
பாண்டிய நாட்டில் மட்டுமல்ல. தமிழகம் முழுவதிலும் களப்பிரர்களின் ஆட்சி தான் அப்போது தொடர்ந்திருக்கிறது. ஆனால் எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா!

அப்படித்தான் கி.பி. 6-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களும், தொண்டை மண்டலத்தில் பல்லவர்களும் பொங்கி எழுந்தனர். பாண்டிய நாட்டில் கடுங்கோன் என்ற மன்னன் களப்பிரர்களின் ஆட்சியை வேரறுத்து, தனது ஆட்சியை நிலைநாட்டினான்.


   

சங்க காலத்தை அடுத்த, முற்காலப் பாண்டிய மன்னர்கள் வரிசையில் முதலானவன் இந்த கடுங்கோன். கி.பி. 575 முதல் கி.பி. 600 வரை இவனது ஆட்சிக் காலம் நீடித்தது. இவனைப் பற்றிய செய்தியை தளவாய்புரம் மற்றும் வேள்விக்குடி செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது.
    
“படுகடன் முளைத்த பருதி போல் வெளிப்பட்ட பாண்டியாதிராசன்”
“ஒடுங்கா மன்னர் ஒளிநகரழிந்த கடுங்கோன்”
“கதிர்வேற்றென்னன்”
என்று வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகின்றன.


    
களப்பிரர்களை வேரறுத்தவன், திரண்ட தோள்களை உடையவன், மறையோர்க்குத் திருமங்கலம் என்ற கிராமத்தை நன்கொடையாக அளித்தவன் என்று தளவாய்புரம் செப்பேடுகள் இம்மன்னனின் புகழைப் பற்றிக் கூறுகின்றன.
    
கி.பி. 600 முதல் கி.பி. 620 வரை அவனி சூளாமணி என்ற மன்னன் கடுங்கோனைத் தொடர்ந்து பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். மாறவர்மன் என்ற சிறப்புப் பெயரைத் தனது பெயருடன்; சேர்த்துக் கொண்டான். அதனால், மாறவர்மன் அவனி சூளாமணி என்றழைக்கப் பட்டான். கடல் போன்ற படைகளை உடையவன்.
 
உண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தமானவன் என்று செப்பேடுகளில் இவனைப் பற்றி புகழ்ந்து எழுதப் பட்டுள்ளது. இவனைத் தொடர்ந்து இவனது வாரிசுகளாகவும், தொடர்ந்து பாரம்பரிய வழி முறைகளில் அடுத்தடுத்து வந்த பாண்டிய மன்னர்களும் தங்களுக்குரிய சிறப்புப் பெயரை அடைமொழியாகக் கொண்டிருந்தனர்.


    
மாறவர்மன் சூளாமணியின் மகன் செழியன் சேந்தன் என்பவன் கி.பி. 620 முதல் 642 வரை 23 ஆண்டுகள் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். சேர மன்னர்களை வென்றதால் வானவன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.இவனது மற்றொரு பெயர் ஜயந்தன் என்பதாகும்.

பாண்டிய நாடு என்பது அப்போது, தென் தமிழகம் முழுவதுமாக இருந்தது. அதனால் இவனது புகழ் தென்னகத்தேயும் பரவியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் மலையடிக்குறிச்சியில் உள்ள குகைக் கோயிலில் இவனைப் பற்றிய கல்வெட்டுச் செய்தி இருக்கிறது.
    
இப்படித் தொடர்ந்த முற்காலப் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலம் 270 ஆண்டுகள் வரை நீடித்தது. களப்பிரர்களைக் களையெடுக்க காரணமாக இருந்த பாண்டிய மன்னர்களால் மறக்க இயலாதவர்கள் இந்தக் களப்பிரர்கள்!

எப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியை நாம அடிக்கடி, நினைத்துப் பார்க்கிறோமோ, அது போலவே சில் தீமைகளையும், நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட இயலாது. அதற்கு உதாரணம் தான் இந்தக் களப்பிரர்கள்!
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kalapirarkal who ruled tamil's over 300 years : pandya king who seized power


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->