ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
Jambuliputtur Kathali Narasinga Perumal Temple Chithirai Car Festival Begins With Flag Hoisting
ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட பழமை வாய்ந்த கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத தேர் திருவிழா விமர்சையாக நடைபெறும். அதனை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இங்கு மூலவர் கதலி நரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் அருள் ஆசி புரிந்து வருகிறார்.
மேலும் செங்கமலத்தாயார், கிருஷ்ணன், துர்க்கை, விநாயகர், சக்கரத்தாழ்வார், அனுமன் மற்றும் முருகன், நவகிரகங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கொடியேற்றத்திற்கு முன்பாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதில் பூர்ணாகுதி நிகழ்ச்சி நடைபெற்று, வாஸ்து சாந்தி மற்றும் பிரவேச பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வார் சுவாமி எதிர்சேவை புரிய கொடி மரத்தில் பட்டம் கட்டப்பட்டது.
கொடி மரத்தில் கட்டப்பட்ட பட்டத்திற்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் முழங்க கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், அதிமுக ஒன்றிய செயலாளர் லோகிராஜன் மற்றும் கோவில் செயல் அலுவலர் சுந்தரி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
English Summary
Jambuliputtur Kathali Narasinga Perumal Temple Chithirai Car Festival Begins With Flag Hoisting