கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டம்!
Jacto Jio strike protest demanding the demands
திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி சாலை முன்பு மத்திய, மாநில அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யா, ஷேக்கபூர், ராஜாஜி, பன்னீர் செல்வம், கணேசன், பாலசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், சா.ஞானசேகரன், சே.பிரபாகரன், சீ.காந்திமதிநாதன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து போராட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்வு குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்தும் நிலையால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும். கல்வி பட்டியல் மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும். பழைய நிலைக்கு தள்ளப்படும் அடித்தட்டு மக்களின் கல்வி தடை விதிக்கும் நிலை, சமூக நீதி வேலை வாய்ப்புக்கு தடை விதிப்பது, பொது நிறுவனங்களை தனியார் மயம் ஆக்குவதால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கும் நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை ஈடுபட்டு வரும் நிலையில் 2019-ல் கடந்த அதிமுக ஆட்சியில் தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்த ஸ்டாலின் இப்போது முதல்வராக இருந்து என்ன செய்தார் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பங்கு அதிக அளவில் இருந்த நிலையில், இதுவரை எந்த கோரிக்கையும் அரசு நிறைவேற்றாத நிலையில் தங்களது நிலைப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் நல்ல பதில் அளிப்பதாக முதல்வர் கூறியிருப்பதால் காத்திருப்பதாகவும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தெரிவித்தனர். நல்ல முடிவை அறிவிக்காத பட்சத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.இதில் நிர்வாகிகள் சுந்தர்ராஜன், ரவி, இ.வாசுதேவன், செந்தில், ப.ஜவஹர், ஜி.பிரசன்னா, டி.தாஸ், வி.ரமேஷ், க.வெண்ணிலா, பா.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary
Jacto Jio strike protest demanding the demands