அமலாக்கத் துறை வழக்குக்கு எதிராக ஐசரி கணேஷ் தாக்கல் செய்த மனு வாபஸ்; மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம்..!
Isari Ganesh's petition against the Enforcement Directorate case has been withdrawn
அமலாக்கத் துறை வழக்கை எதிர்த்து கல்வியாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020-இல் ஐசரி கணேஷுக்கு சொந்தமான திருவள்ளூர் வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்க முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2023-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐசரி கணேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஏற்கெனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசு மருத்துவர் பாலாஜிநாத் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவுக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை, இந்த வழக்கு தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி வழக்கை முடித்துவைத்து விஜிலென்ஸ் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் முடித்து வைக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அமலாக்கத் துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இன்னும் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்த பிறகே இந்த மனுவை விசாரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து அமலாக்கத் துறையின் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக ஐசரி கணேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Isari Ganesh's petition against the Enforcement Directorate case has been withdrawn