இதுதான் உங்க மாற்று அரசியலா விஜய்? கவின் பற்றி விஜய் ஒரு வார்த்தை கூட பேசலையே.. இதுதான் காரணம்?
Is this your alternative politics Vijay Vijay hasnot said a single word about Kavin is this the reason
நெல்லை கவின் ஆணவக் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது அவரது கட்சியினரிடையே கடும் விவாதமாக மாறியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மதுரை மாநாட்டில் கூட, கவின் பற்றி விஜய் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கட்சியின் அறிக்கையோடு மட்டும் நிறுத்திக்கொண்டார். இதனால், “மாற்று அரசியல்” என்று கூறி வரும் விஜய், ஜாதி அடிப்படையிலான ஆணவக் கொலை குறித்து மௌனம் காப்பது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன.
நெல்லையில் நடந்த இந்தச் சம்பவத்தில் பலியான கவின், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் முன்னணி ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பாளையங்கோட்டை சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியுடன் காதல் தொடர்பில் இருந்தார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் உறவை எதிர்த்த குடும்பம், இறுதியில் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் மூலம் கவின் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைக்கு பின், சுர்ஜித் நேரடியாக காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரின் பெற்றோர்கள் இருவரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, அவர்கள் உதவி ஆய்வாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். வழக்கு CBCID-க்கு மாற்றப்பட்டு, சுர்ஜித்துக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது.
கவின் குடும்பம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட பின்பே கவின் உடல் பெற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. அந்த நிகழ்வில் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஆனால், வெற்றிக் கழகத் தலைவர் விஜய் – மாற்று அரசியல், அம்பேத்கார், பெரியார் கொள்கைகள் குறித்து தொடர்ந்து பேசியும், இந்த சம்பவத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்காதது அவரது சொந்தக் கட்சியினருக்கே சிந்திக்க வைத்துள்ளது. விஜயை, “தென் மாவட்ட ஜாதி வாக்குகள் பாதிக்கப்படும் என்பதால்” அவரது வியூக ஆலோசகர்கள் பேச விடாமல் தடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக ஜாதி அடிப்படையிலான சம்பவங்களில் முக்கிய கட்சிகள் மௌனமாக இருப்பதாகவே விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் இந்த முறை திமுக நேரடியாகக் கருத்து தெரிவித்த நிலையில், மாற்று அரசியல் பேசும் விஜயின் மௌனம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
நெல்லை கவின் கொலை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்படும் நிலையில், விஜய் தொடர்ந்து மௌனமாக இருப்பாரா? அல்லது தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவாரா? என்பது தற்போது பெரும் கேள்வியாக உள்ளது.
English Summary
Is this your alternative politics Vijay Vijay hasnot said a single word about Kavin is this the reason