காவல் அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்...அதிமுக வலியுறுத்தல்!
Immediate action must be taken against those who threatened to extort money from the police officers AIADMKs demand
காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகாரின் மீது எவ்வித பஞ்சாயத்தும் இன்றி விருப்பு வெறுப்பு சுயநலமின்றி விரைந்து நடவடிக்கை எடுத்தால் குற்றங்கள் மிக குறைய நிறைய வாய்ப்புள்ளது என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் யோசனை தெரிவித்துள்ளார்.
மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டிய காவல்துறை நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை இழந்து வருவது சரியானது அல்ல. இந்த உண்மைநிலையை உணர்ந்து காவல்துறையில் புறையோடியுள்ள குற்றச்சம்பவங்கள், கோஷ்டிபூசல்கள், அரசியல் தலையீடுகள் போன்றவற்றை காவல்துறையின் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்படி இதற்குமேலும் சரியான நடவடிக்கையை காவல்துறையின் உயரதிகாரிகள் எடுக்கவில்லை என்றால் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை காப்பாற்ற யாராலும் முடியாது.
தற்போது புதுச்சேரி காவல்துறை போக்குவரத்து கண்காணிப்பாளர் மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் தங்களது கடந்த கால சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஒரு குற்றத்தை மூடி மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டை தங்களது சுயநலத்திற்காக ஒரு கும்பல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கை வாபஸ் பெற கோடிக்ககணக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசியுள்ளனர். பேசிய பணம் தங்களுக்கு கிடைக்காததால் ஒதியன்சாலை காவல்நிலையத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடப்பட்டது. அதனடிப்படையில் உடனடியாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை ஆகும். காவல்துறை அதிகாரிகளிடமே காவல்நிலையத்திற்கு நேரிடையாக வந்து பணம் கேட்டு மிரட்டல் விடுவது என்பது காவல்துறையின் பலகீனத்தை எடுத்துகாட்டுகிறது.
காவல் அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தினசரி பல அப்பாவி வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், மதுபான நிறுவனங்கள், வருவாய் வரக்கூடிய துறையில் பணிபுரியும் அதிகாரிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட வருவாய் கிடைக்க கூடிய நிலையில் உள்ளவர்களை சில அரசியல்வாதிகள், சில காவல்துறை அதிகாரிகள், சில சமூக சேவகர்கள் என்ற பெயரில் மிரட்டுவது, பணம் பறிப்பது ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பது.
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் ஏதும் இல்லை. மாறாக தவறு செய்பவர்களையும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கட்டப்பஞ்சாயத்து நடைபெறும். பஞ்சாயத்து முடிவில் சதவீத அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படும். பல காவல்நிலையங்கள் நீதிமன்றம் போன்றே செயல்படுகின்றன. ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் பல இளம் வழக்கறிஞர்கள் போர்வையில் பாதிக்கப்படுபவர்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கும் ஆதரவாக பேச நிரந்தரமாக உள்ளனர்.
காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகாரின் மீது எவ்வித பஞ்சாயத்தும் இன்றி விருப்பு வெறுப்பு சுயநலமின்றி விரைந்து நடவடிக்கை எடுத்தால் குற்றங்கள் மிக குறைய நிறைய வாய்ப்புள்ளது. காவல்துறையினரிடம் மக்களின் எதிர்பார்ப்பும் இதுவே ஆகும்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு தமிழக காவல்துறையினரால் திருபுவனை பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் சுமார் 15 கோடி ரூபாய் பெருமானமுள்ள திமிங்கலம் எச்சம் இருப்பது கண்டறியப்பட்டு இந்த வழக்கு புதுச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சமுதாயத்தில் மிக சாதாரண நிலையில் உள்ள ஒன்றிரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பொருள் உண்மையில் திமிங்கிலம் எச்சம் அம்பர் என்பதுதானா என்று தெரியவில்லை. அது சம்பந்தமான நிபுணர்கள் ஆய்வும் இதுவரை நடத்தப்படவில்லை. அப்படி உண்மையில் இந்த பொருள் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தமிங்கிலம் எச்சமாக இருக்குமேயானால் இதன் பின்னணியில் உள்ள வசதிப்படைத்த பல முக்கிய நபர்கள் இதில் நிச்சயம் சம்பந்தப்பட்டிருப்பார்கள். எனவே அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ விசாரணைக்கு புதுச்சேரி காவல்துறை தலைவர் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு பூதாகரமான பல பிரச்சனைகளை தமிழக காவல்துறையினர் இங்கு வந்து கண்டுபிடிப்பது தொடர்கதையாக உள்ளது. தற்போது இந்த தமிங்கிலம் எச்சம், ஏற்கனவே சந்தன ஆயில் தொழிற்சாலை, தமிழக டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் போலி மதுபான தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் தமிழக காவல்துறையால் தான் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் வெளிமாநில போதை பொருட்கள் நடமாட்டத்தின் மீது புதுச்சேரி காவல்துறையினர் உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சியர் பல ஆய்வு கூட்டங்களை நடத்தியும் போதை பொருள் நடமாட்டத்தை காவல்துறையால் தடுக்க முடியவில்லை. நகரப்பகுதியில் உள்ள உருளையன்பேட்டை, ஒதியன்சாலை, பெரியகடை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் க்ரைம் போலீசார் மனது வைத்தாலே போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியும். இது சம்பந்தமாக யாரை குறை கூறுவது என்றே தெரியவில்லை என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
English Summary
Immediate action must be taken against those who threatened to extort money from the police officers AIADMKs demand