“கரூர் உயிரிழப்புக்கு தவெக காரணம் என்றால் கட்சியை தடை செய்யுங்கள்; விஜய்யை கைது செய்யுங்கள்” – அர்ஜூன் சம்பத்
If Thaveka is responsible for the Karur deaths ban the party arrest Vijay Arjun Sampath
கரூரில் நடந்த துயரச்சம்பவம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் விஜயையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலால் 41 பேர், அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தவெகவின் சில முக்கியத் தலைவர்களான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், தவெகவின் தரப்பில் சிபிஐ விசாரணை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத் கூறியதாவது:
“கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் எதற்காக பிரசாரம் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பாருங்கள் விஜய். தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் கட்சியை கலைத்துவிடுங்கள்.
கரூர் உயிரிழப்புகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் காரணம் என்றால் அக்கட்சியை தடை செய்ய வேண்டும். விஜய்யை கைது செய்ய வேண்டும்.
கள்ளச்சாராய மரணத்தின் போது முதல்வர் நேரில் செல்லவில்லை. ஆனால் இங்கு 41 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இதிலும் அரசு அலட்சியமாக நடந்து கொள்கிறது.
எதிர்க்கட்சிகளின் கூட்டங்களை சீர்குலைப்பதே திமுக அரசின் நோக்கம். ஆளுநர் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,” எனக் கடுமையாக சாடினார்.
மேலும் அவர்,“வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு கோடி இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளனர். அவர்களுக்கு காங்கிரஸ், திமுக, மம்தா பானர்ஜி ஆகியோர் ஆதரவளிக்கிறார்கள். ஓட்டுரிமை கோரி போராடி வருகின்றனர்.
இதை முறியடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருப்பூரில் ஏராளமான வங்கதேசத்தினர் உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து நாடு கடத்த வேண்டும்,” எனக் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அர்ஜூன் சம்பத்தின் இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
If Thaveka is responsible for the Karur deaths ban the party arrest Vijay Arjun Sampath