சூட்கேசில் மனித எலும்புகள்… கூடுவாஞ்சேரி வீட்டில் உடல் பாகங்கள்...! - கொலை வழக்கில் மணிப்பூரில் தம்பதி கைது
Human bones suitcas body parts Kuduvancheri house Couple arrested Manipur murder
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா சென்ற ரெயிலில் தலை இல்லாத மனித எலும்புக்கூடுகள் மற்றும் உடல் உறுப்புகள் அடங்கிய சூட்கேஸ் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னணி தொடர்பான விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட தம்பதி மணிப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 5-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்ட விரைவு ரெயில் ஆக்ரா ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. ரெயிலின் கடைசி பெட்டியில் யாரும் உரிமை கோராத சிவப்பு நிற சூட்கேஸ் கிடந்தது. சந்தேகமடைந்த காவலர்கள் அதை திறந்து பார்த்தபோது, தலை இல்லாத மனித எலும்புக்கூடுகள் மற்றும் சில உடல் உறுப்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவற்றை கைப்பற்றிய காவலர்கள், தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பினர். சூட்கேஸ் எங்கிருந்து வந்தது, அதில் இருந்த உடல் பாகங்கள் யாருடையது, இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது.விசாரணையின் அடுத்த கட்டமாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆக்ரா காவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து சிவப்பு நிற சூட்கேசை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்புற பெட்டியில் ஏற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.அந்த காட்சிகளைத் தொடர்ந்து பல்வேறு ரெயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் சூட்கேசை ரெயிலில் ஏற்றிய இருவரும் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கிச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து கூடுவாஞ்சேரி காவலர்கள், அந்த இருவரின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தொடர்ந்து தேடினர். அப்போது அவர்கள் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்றது தெரியவந்தது.அந்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், காவலர்கள் கதவை திறந்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டுக்குள் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. அங்கு பெரிய அண்டா பாத்திரம் ஒன்று சிவப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்தது.பாத்திரத்தை திறந்து பார்த்தபோது, மனித உடலின் சதைப்பகுதிகள் துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்தது. அவற்றில் மைதா மாவு கலக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள், உடல் பாகங்களை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பினர்.
ஆக்ரா ரெயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட எலும்புகள் மற்றும் உடல் உறுப்புகளும், கூடுவாஞ்சேரி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சதைப்பகுதிகளும் ஒரே நபருடையதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவை ஒரே நபருடைய உடல் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா, 38, என்பது தெரியவந்தது. இவர் தாம்பரம் அருகே உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 19 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
அவர் தாம்பரத்தில் குளிர்சாதனப் பெட்டி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.விசாரணையில், தனது தாயார் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததால் தான் தனியாக தங்கி வேலை செய்து வருவதாக மகன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து ஹயாத் நிஷாவுடன் தொடர்பில் இருந்தவர் யார் என்பது குறித்து கூடுவாஞ்சேரி காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ஹயாத் நிஷா வசித்து வந்த வீட்டில் கடந்த 2 மாதங்களாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மணிக்உத்தீன் லஸ்கர், 22, மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பகவதி மாஜி ஆகியோர் தம்பதியாக தங்கி இருந்தது தெரியவந்தது.இதனால் காவலர்களின் சந்தேகம் அந்த தம்பதியினர் மீது திரும்பியது.
ஹயாத் நிஷா கொலை செய்யப்பட்ட பின்னர் இருவரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த தம்பதியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்ட நிலையில், இருவரும் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டம் காசிம்பூர் பகுதியில் பதுங்கியிருப்பது தனிப்படை காவலர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து மணிப்பூர் காவலர்களின் உதவியுடன் அங்கு சென்ற தனிப்படையினர், மணிக்உத்தீன் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகிய இருவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர்களை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், கொலை எவ்வாறு நடந்தது, உடல் பாகங்கள் எவ்வாறு வெட்டப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பதையும் கண்டறிய காவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடைபெறும் தொடர் விசாரணையின் முடிவிலேயே இந்த கொலையின் முழுமையான பின்னணி மற்றும் அதற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Human bones suitcas body parts Kuduvancheri house Couple arrested Manipur murder