ஜல்லிக்கட்டு பேச்சால் வெடித்த சர்ச்சை...! 'தமிழர்களின் வீர விளையாட்டை எதிர்க்கவில்லை'...! - கருப்பையா
Controversy erupted over Jallikattu talk Not opposing heroic sport of Tamils Karuppiya
சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஜல்லிக்கட்டு குறித்து சட்டமன்றத்தில் தான் பேசிய கருத்துகளுக்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியத்தோடும் வீரத்தோடும் பின்னிப்பிணைந்த விளையாட்டு என்றும், அதனை இழிவுபடுத்தும் நோக்கம் தமக்கு ஒருபோதும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“தமிழ் குடிமக்களின் வீர விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு என்பது வரலாற்று உண்மை. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

நான் பிறந்த மண்ணின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பற்றி நான் எப்படி இழிவாகப் பேசுவேன்?அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வந்த தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தற்போது போதிய நிதியின்றி மூடப்பட்ட நிலையில் உள்ளது. அந்த ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர சுமார் ரூ.50 கோடி நிதி தேவைப்படுகிறது. அதேவேளையில், பொதுமக்களுக்கு நேரடியாக பயன் அளிக்காத வகையில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த அரங்குக்காக செலவிடப்பட்ட நிதியை சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க பயன்படுத்தியிருக்கலாம் என்ற கருத்தையே நான் முன்வைத்தேன். ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கும் நோக்கில் அந்த கருத்தை நான் தெரிவிக்கவில்லை.ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வீர விளையாட்டு.
ஆனால், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் கலாசாரத்தைப் பின்பற்றி தனி அரங்கம் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது நமது பாரம்பரிய நடைமுறைக்கு மாறானது என்பதே எனது கருத்து.பொங்கல் பண்டிகையையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் பின்னரும் தொடர்ந்து ஏறு தழுவுதல் அரங்கில் போட்டிகள் நடத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதைவிட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டும் சூழல் ஏற்பட்டதாக நான் கருதுகிறேன்.மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடர வேண்டும், உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதையே கருத்தில் கொண்டு சட்டமன்றத்தில் பேசினேன்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.எனது பேச்சால் இளைய தலைமுறையினரின் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Controversy erupted over Jallikattu talk Not opposing heroic sport of Tamils Karuppiya