நேபாளத்தை புரட்டிப்போட்ட பேரழிவு...! பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு...3,000-க்கும் மேற்பட்டோர் மாயம்...!
disaster that devastated Nepal Death toll rises to 682 More than 3000 missing
நேபாளத்தில் பனிச்சரிவை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு, பல பகுதிகளை சிதைத்துள்ள நிலையில், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 682 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு, போடேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கை உருவாக்கியது. கண் இமைக்கும் நேரத்தில் பெருக்கெடுத்த வெள்ளம் மத்திய நேபாளத்தின் பல்வேறு பகுதிகளை சூறையாடியது. வீடுகள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கினர்.

வெள்ளம் வடிந்த பகுதிகளில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேறு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே தொடர்ந்து தேடுதல் நடைபெற்று வருவதால், அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் பிணவறைகள் நிரம்பியுள்ளதால், மீட்கப்படும் உடல்களை பாதுகாப்பாக வைக்க பல்வேறு இடங்களில் தற்காலிக பிணக்கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பான எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இதனால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் தவிப்பில் உள்ளனர்.மாயமானவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட 167 இந்தியர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலும் பதற்றமும் கவலையும் அதிகரித்துள்ளது. மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 128 பேரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பேரிடர் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாகவும் மீட்புப்பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் வீரர்கள் உள்பட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் களத்தில் இறங்கியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் மீட்புப்பணியில் இணைந்துள்ளனர்.
இதுவரை 4,451 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக யுனிசெப் எச்சரித்துள்ளது. குறிப்பாக, குறைந்தது 17 ஆயிரம் குழந்தைகளுக்கு உடனடி உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தின் கோரத்தாண்டவத்தில் 18 பள்ளிகள் முற்றிலும் அழிந்துள்ளன. மேலும் 20 பள்ளிகள் சேதமடைந்துள்ளதால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரிடரால் குறைந்தது 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது. தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேலும் விரைவுபடுத்த கனரக ஆளில்லா விமானங்கள், மரபணு பரிசோதனை கருவிகள் மற்றும் உடல்களை குளிரூட்டிப் பாதுகாக்கும் சேமிப்பு அலகுகள் உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுவதாக நேபாளம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேரழிவால் ஏற்பட்ட சேதங்களை சீரமைத்து நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான செலவு பல பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.பேரிடரின் தாக்கம் ஓயாத நிலையில், நேபாளத்தின் கோஷி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.நுவாகோட், ரசுவா, தாடிங் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்க தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, வினோத், தென்னரசு ஆகிய 4 பேரும் கடந்த 27-ந்தேதி டெல்லி சென்றனர்.அவர்கள் மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து, அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் ஏற்கனவே 21 தமிழர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து மேலும் 219 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே நேபாளத்தில் சிக்கியுள்ள மேலும் 49 தமிழர்களின் நிலை குறித்து தகவல் கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.
மாயமானவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் சென்னையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேபாளத்தில் ஒருபுறம் மீட்புப்பணி தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் மாயமான ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
English Summary
disaster that devastated Nepal Death toll rises to 682 More than 3000 missing