என்ன பெரிய அமெரிக்கா, ரஸ்யா! இங்க மட்டும் 6,720 டன் தங்கமா? தமிழ்நாட்டில் எவ்வளவு தங்கம் இருக்கு தெரியுமா?
How big America is Russia Is there 6720 tons of gold here alone Do you know how much gold there is in Tamil Nadu
தமிழகத்தின் குடும்பப் பெண்களிடம் இருக்கும் தங்கக் கையிருப்பு உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. உலக தங்கக் கவுன்சில் வெளியிட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி, தமிழக மக்களின் வீடுகளில் மொத்தம் சுமார் 6,720 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அளவு தங்கம், அமெரிக்காவின் மொத்த தேசிய தங்கக் கையிருப்புக்கு நிகரானதாகவும், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளின் அரசுத் தங்க கையிருப்பை விட கூடுதலாகவும் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியர்களுக்கு தங்கம் என்பது வெறும் நகையாக அல்லாமல், வாழ்வின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் தங்கம் குடும்பத்தின் பெருமை, பாதுகாப்பு மற்றும் மரபின் அடையாளமாகக் கருதப்படுகிறது. திருமணம், விழா, குழந்தை பிறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் தங்கம் வழங்குவது தமிழக கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பங்காக உள்ளது.
இந்தியாவில் குடும்பங்களுக்கு சொந்தமான மொத்த தங்கத்தில் சுமார் 45 சதவீதம் தென்னிந்தியப் பெண்களின் வசம் உள்ளது. அதிலும் தமிழகப் பெண்களே முதலிடத்தில் உள்ளனர் என உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது. தங்கம் என்பது தமிழக பெண்களிடம் வெறும் ஆபரணம் அல்ல, அது ஒரு நம்பிக்கை, குடும்பப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால செல்வம் என்பதால், அவர்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி சேமிக்கின்றனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மோர்கன் ஸ்டேன்லி நிறுவனம் கடந்த அக்டோபரில் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, இந்தியக் குடும்பங்களிடம் மொத்தம் 34,600 டன் தங்கம் உள்ளது. அதன் மதிப்பு 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3,36,92,890 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மொத்த தங்கத்தில் தென்னிந்தியப் பெண்கள் 45 சதவீதம் தங்கத்தை வைத்துள்ளனர். அவர்களில் தமிழக பெண்களே மிக அதிக அளவில் தங்கம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஒப்பிடும்போது, அமெரிக்கா 8,000 டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், ரஷ்யா 1,900 டன் தங்க கையிருப்புகளை மட்டுமே வைத்துள்ளன.
கடந்த இருபது ஆண்டுகளாக தங்கத்தின் மதிப்பு ஆண்டுதோறும் 8 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது. இதுவே தங்கத்தை மற்ற முதலீட்டு வழிகளுக்கு மாறாக நம்பகமான சொத்தாக ஆக்குகிறது. பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் எளிதாக விற்று பணமாக்கக் கூடியது என்பதால், தங்கம் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் பாதுகாப்பு வங்கியாக மாறியுள்ளது.
நகை வியாபாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் தங்கம் என்பது வெறும் நகை அல்ல; அது ஒரு உணர்ச்சி, ஒரு மரபு. அடுத்த தலைமுறைக்காக தங்கம் சேமிக்கும் பழக்கம் இன்னும் வலுவாக உள்ளது. இதனால், தமிழகத்தின் தங்கக் கையிருப்பு வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது,” என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, உலக நாடுகளின் அரசுக் கையிருப்பை மிஞ்சி, தமிழக குடும்பப் பெண்களின் வீடுகளில் குவிந்திருக்கும் தங்கச் செல்வம், உலகளாவிய அளவில் பேசப்படும் புதிய சாதனையாக மாறியுள்ளது.
English Summary
How big America is Russia Is there 6720 tons of gold here alone Do you know how much gold there is in Tamil Nadu