குடும்பச் சண்டையால் நேர்ந்த கொடூரம்...! கணவருடன் ஏற்பட்ட மோதலில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு...! - பின்னணி என்ன...?
horror caused by family feud bizarre decision made by female police officer conflict her husband What background
சென்னை எழும்பூர் பகுதியில் பணியாற்றி வந்த பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் நீண்டநாட்களாக நிலவி வந்த மனக்கசப்புகள் இந்த துயர நிகழ்வுக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
எழும்பூர் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த விஜய் (30), தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சத்யா (28), எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை உள்ளது.இருவரும் பணிக்குச் செல்வதால் குழந்தை பராமரிப்பு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உருவாகியதாகவும், அதனுடன் குடும்ப சூழ்நிலைகளைச் சுற்றிய பல்வேறு மனக்கசப்புகளும் இணைந்து கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 27-ஆம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சத்யா, வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதைக் கண்டு பதற்றமடைந்த விஜய், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று சத்யாவை மீட்டார். பின்னர் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த சத்யா, உயிர் பிழைக்க போராடிய நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்பிற்கான முழுமையான பின்னணி மற்றும் சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பெண் காவலர் சத்யாவின் உயிரிழப்பு தொடர்பான விவகாரத்தில் விரிவான நிர்வாக விசாரணை நடத்த வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான நடவடிக்கையை சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் பணியாற்றி வந்த இளம் பெண் உயிரிழந்த இந்த சம்பவம் சக காவலர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
horror caused by family feud bizarre decision made by female police officer conflict her husband What background