சேலத்தில் வரலாற்று அதிசயம்...! பூமிக்கு அடியில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட மனித புதைகுழிகள்...! 3,600 ஆண்டுகள் பழமையை கண்டு அதிர்ந்த தொல்லியல் துறை...!
Historical wonder Salem Huge human burials discovered underground Archaeology department shocked by discovery 3600 years antiquity
சேலம் மேட்டூரை ஒட்டிய காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தெலுங்கனூர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றை தன்னகத்தே புதைத்து வைத்திருக்கும் தொன்மை மிக்க பகுதியாக விளங்குகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை அடர்ந்த வனமாகக் காட்சியளித்த இப்பகுதி, பின்னாளில் மக்கள் குடியேற்றம் பெற்ற பகுதியாக மாறியது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் காலங்களில், காவிரி கரையோரத்தில் வரிசையாக அமைந்துள்ள ஏராளமான புதைகுழிகளும், தொன்மையைப் பறைசாற்றும் கல் வட்டங்களும் வெளிப்படுகின்றன.

உள்ளூர் மக்கள் இவ்வகை கல் வட்டங்களை "பாண்டியன் திட்டுகள்" என்ற பெயரால் அழைத்து வருகின்றனர்.இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, தொன்மையான வாள்கள், அம்பு முனைகள், முதுமக்கள் தாழிகள், பெரிய மற்றும் சிறிய மண்பானைகள், பல்வேறு பயன்பாட்டு கருவிகள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விரிவான கள ஆய்வை நிறைவு செய்த தொல்லியல் துறையினர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசின் அனுமதியுடன் முறையான அகழாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த அகழாய்வின் முக்கிய கட்டமாக, தெலுங்கனூர் மற்றும் மாங்காடு காவிரி கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தோண்டுதல் பணிகளில் சுமார் 3,600 ஆண்டுகள் பழமையான மனித புதைகுழிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், முழுமையான நிலையில் பாதுகாக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.அவற்றுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டிருந்த உயர் தர இரும்பினால் வடிவமைக்கப்பட்ட தற்காப்பு வாள்கள், தாலிகள், சுண்ணாம்பு மணிகள், பல்வேறு வடிவிலான மண்பானைகள் மற்றும் ஈமச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் அகழாய்வில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த அரிய கண்டுபிடிப்புகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்ததில், புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்களும், அதனைத் தொடர்ந்து இரும்புக் கால மக்களும் இந்தப் பகுதியில் வாழ்ந்ததற்கான உறுதியான தடயங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வாழ்வியல், தொழில்நுட்பத் திறன் மற்றும் அடக்க மரபுகளை வெளிப்படுத்தும் அரிய சான்றுகளாக இந்தக் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Historical wonder Salem Huge human burials discovered underground Archaeology department shocked by discovery 3600 years antiquity