முதல்ல உங்க கட்சியினருக்கு ஒழுக்கத்தை கத்துக் கொடுங்க...! - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த கனிமொழி எம்.பி...!
First teach your party members discipline Kanimozhi MP who grilled Chief Minister Vijay
குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும், அவரைக் கடத்த முயற்சி நடைபெற்றதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக அரசையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயையும் குறிவைத்து தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், "கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றியச் செயலாளர் மீது பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தும், இதுவரை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாடு இந்த விவகாரத்தில் ஏன் பின்பற்றப்படவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "காவல்துறையின் பொறுப்பை தன் வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், குற்றச்சாட்டுக்கு உள்ளான தனது கட்சி நிர்வாகி மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், பெண்களின் பாதுகாப்பு, கட்சி ஒழுக்கம் மற்றும் பொது வாழ்க்கையின் பொறுப்புணர்வு குறித்து முதலில் தனது கட்சியினருக்கே உரிய அறிவுறுத்தலையும் ஒழுக்கப் பாடத்தையும் வழங்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பதிவு அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
First teach your party members discipline Kanimozhi MP who grilled Chief Minister Vijay