'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம்: டெண்டர் அறிவிப்பை வெளியிட்டு பணிகளைத் தீவிரப்படுத்திய தமிழ்நாடு அரசு...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' நடைமுறைக்கு வருவதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 'செப்டம்பர் 15, 2026' அன்று முதல்-அமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.இதற்காக ஒரு கிராம் தங்கத்தின் கொள்முதல் விலை ரூ.5,725 என நிர்ணயித்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ள நிலையில், ஒரு கிராம் எடையுடைய '4,41,667 தங்க மோதிரங்கள்' கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அரசாணையில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஒப்புதல் வழங்கிய 'வெற்றித் தமிழகம் தொலைநோக்கு வளர்ச்சித் திட்டத்தின்' முக்கிய அம்சமாகவே இந்தத் திட்டம் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாயையும், புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கௌரவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தாய்மையின் பெருமையையும், குழந்தையின் வருகையையும் சமூக மரியாதையுடன் கொண்டாடும் அரசின் புதிய முயற்சியாக இது கருதப்படுகிறது.

தாய்-சேய் நலனில் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு, கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச மகப்பேறு சிகிச்சை, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு, அவசர மகப்பேறு மருத்துவ வசதிகள், ஊட்டச்சத்து திட்டங்கள், கர்ப்ப கால கண்காணிப்பு மற்றும் மின்னணு பதிவேட்டு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் பலனாக மாநிலத்தின் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றால், அந்தக் குழந்தைக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கப்படும்.தமிழர் பாரம்பரியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ள 'தாய்மாமன் சீர்' என்ற மரபை நினைவூட்டும் வகையில், புதிதாகப் பிறக்கும் குழந்தையை வரவேற்று வாழ்த்தும் அடையாளமாக அரசு தாய்மாமனின் பங்கை ஏற்று இந்தத் தங்க மோதிரத்தை வழங்குகிறது.

தமிழர் பண்பாட்டு மரபையும், அன்பும், உறவுப் பிணைப்பையும் வெளிப்படுத்தும் அடையாளமாக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பையும் நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகத்துவத்தை போற்றும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. திட்டப் பணிகள் தாமதமின்றி தொடங்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகளை உடனடியாக கோர முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் பயனை பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள். திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று முதலமைச்சர் விஜயால் நடைபெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thaimaman Gold Ring project Tamil Nadu government intensified work by issuing tender notice


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->