தேனி மாவட்டத்தில் வரலாற்றுச் சாதனை: 4,000 ஆண்டுகள் பழமையான வெள்ளை பாறை ஓவியங்கள் மற்றும் இரும்பு உருக்கு தடயங்கள் கண்டுபிடிப்பு...!
Historical achievement Theni district Discovery 4000year old white rock paintings and traces iron smelting
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மலைப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு புதிய தடம் பதிக்கும் வகையில், சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சங்கிலிக்கரடு பகுதியில் பாறைகளின் மீது வரையப்பட்டுள்ள இந்தப் பழங்கால ஓவியங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டு மரபுகளையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.

கண்டறியப்பட்ட ஓவியங்களில் மனிதர்களின் உருவங்கள், விலங்குகளை வேட்டையாடும் காட்சிகள், குழுவாக மேற்கொள்ளப்பட்ட சடங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளன.
இயற்கையான பாறை மேற்பரப்பில் வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள இக்காட்சிகள், அக்கால மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, வேட்டைத் தொழில், சமூக அமைப்பு மற்றும் நம்பிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்களை வழங்கக்கூடியதாக உள்ளன.
இதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் பழங்கால உலோகத் தொழில்நுட்பம் நடைபெற்றதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. குறிப்பாக இரும்பு உருக்கு எச்சங்கள், சுடுமண் குழாய்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்கள், அக்கால மக்கள் இரும்பை உருக்கி பயன்படுத்தியதற்கான முக்கிய ஆதாரங்களாகப் பார்க்கப்படுகின்றன.ஒரே பகுதியில் பழங்கால பாறை ஓவியங்களுடன் உலோகத் தொழில் தொடர்பான தடயங்களும் கிடைத்திருப்பது, இந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் சங்கிலிக்கரடு மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலும் முறையான கள ஆய்வுகளை மேற்கொண்டு, இதுபோன்ற மேலும் பல தொல்பொருள் சான்றுகளை வெளிக்கொணர வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Historical achievement Theni district Discovery 4000year old white rock paintings and traces iron smelting