வரி செலுத்தத் தவறினால் சேவையைத் துண்டிக்க காட்டும் வேகத்தை உள்கட்டமைப்பை வழங்குவதில் காட்டுவதில்லை ஏன்..? உயர் நீதிமன்றம் அதிருப்தி..!
High Court questions why the same speed shown in tax collection is not demonstrated in providing infrastructure
சென்னை தேனாம்பேட்டை எல்லை அம்மன் காலனி பகுதியில் உள்ள சாலையில் சட்டவிரோத வாகன நிறுத்தமிடம் மற்றும் அனுமதி பெறாத ஒர்க்ஷாப்பை அகற்றக்கோரி சாஜு அலெக்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சொத்து வரி, குடிநீர் வரி, லைசென்ஸ் கட்டணம் போன்றவற்றை மாநகராட்சி உயர்த்திக் கொண்டே போகும்போது, பொது மக்களுக்கு சாலை வசதி, ஆக்கிரமிப்பில்லாத நடைபாதைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், பொதுமக்கள் வரி செலுத்தத் தவறினால் உடனடியாகச் சேவையைத் துண்டிக்கும் அதிகாரிகள், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை வழங்குவதில் அதே வேகத்தைக் காட்டுவதில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், சென்னை நகரில் ஆக்கிரமிப்பில்லாத நடைபாதைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 26-ஆம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.
English Summary
High Court questions why the same speed shown in tax collection is not demonstrated in providing infrastructure