செங்கோட்டையனுக்கு பெருகும் ஆதரவு! சந்திக்க திரண்டு வரும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்!
Growing support for Sengottaiyan OPS supporters flock to meet him
அ.தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சியை விட்டு சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதற்காக 10 நாள் கெடு வைப்பதாக எச்சரித்த அவர், “இது நடைபெறாவிட்டால், இதே கோரிக்கையுடன் இருப்பவர்களை ஒன்றிணைப்பேன்” என தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசாரப் பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்ற அறிவிப்பும் கட்சிக்குள் அதிர்வலை ஏற்படுத்தியது.
இந்த பேட்டியின் பின், அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி, கட்சி அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கு பதிலடி என, கோபி ஒன்றிய நகர பேரூராட்சி நிர்வாகிகள் 1000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, அந்த ராஜினாமா கடிதங்களை முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவிடம் ஒப்படைத்தனர்.
செங்கோட்டையனுக்கு திறந்த ஆதரவு அளித்த சத்தியபாமா, தனது வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதற்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமி, அவருடைய மகளிர் அணி பதவியையும் பறிக்கும் உத்தரவை பிறப்பித்தார்.
இதன் பின்னணியில், செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒன்றாக திரண்டு வருகின்றனர். கோவையை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், செங்கோட்டையனை நேரில் சந்தித்து, சிங்காநல்லூர் சிவன் கோவில் பிரசாதத்தை வழங்கினர். மேலும், பரிவட்டம் கட்டி, அர்ச்சகர்களின் ஆசிர்வாதத்துடன் அவருக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இதனால், அ.தி.மு.க.வில் செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதல், கட்சி எதிர்காலத்தை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
Growing support for Sengottaiyan OPS supporters flock to meet him