ரத்தக் கறையுடன் சிக்கிய கும்பல்...! ஆலங்குளம் அரிவாள் வெட்டு சம்பவத்தின் பின்னணி என்ன...? மேலும் 6 பேர் கைது...! - காவலர்கள் தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மாதா கோவில் தெருவில் நடைபெற்ற திருமண விழாவைத் தொடர்ந்து வெடித்த மோதல், பின்னர் பல்வேறு இடங்களில் தொடர் வன்முறை சம்பவங்களாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்டூரைச் சேர்ந்த ஒருவரின் திருமணம் கடந்த மே 29-ஆம் தேதி நடைபெற்றது. திருமணத்திற்கு முந்தைய இரவு, மணமகன் இல்லம் அருகே வாழ்த்து பதாகைகள் அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபோதையில் அங்கு வந்த இளைஞர் ஒருவருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் தலையிட்டு சமரசம் செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.திருமண நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு மாலை நேரத்தில் மணமகன் இல்லம் அருகே பொதுமக்கள் சிலர் ஒன்றுகூடி நின்றிருந்தனர். அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல், திடீரென அரிவாள்களுடன் புகுந்து அங்கிருந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்த கொடூர தாக்குதலில் நெட்டூரைச் சேர்ந்த ரமேஷ், அவரது மகன் அருள் மாறன், சந்தோஷ்குமார், ராயப்பன், ராம்குமார் மற்றும் திருமண நிகழ்ச்சிக்காக மேளக்குழுவில் வந்த மாடசாமி உள்ளிட்ட 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் முதலில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காயமடைந்தவர்களின் உறவினர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆலங்குளம்–ரெட்டியார்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

இதனையடுத்து சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டபோது, பதிவு எண் இல்லாத மூன்று இருசக்கர வாகனங்களில் தாக்குதல்காரர்கள் வந்தது உறுதியானது.நெட்டூரில் தாக்குதல் நடத்திய அதே கும்பல், பின்னர் நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள தெற்குப்பட்டி கிராமத்திற்குச் சென்று அங்கு அப்துல் ரகுமான் மற்றும் முபாரக் ஆகியோரை வழிமறித்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், இந்தக் கும்பல் அம்பை பகுதியில் இருந்து தனது வன்முறைச் செயல்களை தொடங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரம்மதேசம் பகுதியில் மணிகண்டன் என்பவரை மிரட்டி தாக்கியதுடன், வாகைகுளம் பகுதியில் உள்ள சிற்பக்கலை தொழிற்கூடத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்த ஊழியரின் கைப்பேசியையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.தொடர்ச்சியாக நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

நள்ளிரவு நேரத்தில் சுத்தமல்லி அருகே கல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இசக்கிமுத்து மற்றும் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சிலர் கிராமப்புற குளம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

ட்ரோன் கண்காணிப்பு கருவியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், பதுங்கியிருந்தவர்கள் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. தப்பியோட முயன்றவர்களை காவலர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்ட அய்யப்பன் என்பவரை கைது செய்ய சென்றபோது, அவர் தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அய்யப்பன் காயமடைந்தார்.பின்னர் அவரை கைது செய்து சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த தலைமை காவலரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின்போது தப்பிச் செல்ல முயன்ற ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சண்முகசுந்தரம், நந்து, வேல்கார்த்திக், இசக்கி ராஜா, பேச்சிமுத்து மற்றும் சண்முகநாதன் என்கிற ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gang caught blood stains What background Alankulam sickle slashing incident 6 more people arrested Police investigating intensively


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->