சீறிப்பாயும் வெள்ளம்...! குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு...! - சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை...!
Flooding Sudden increase water flow Courtallam Aintharuvi Tourists banned from bathing
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் எதிரொலியாக குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளநீர் வெண்மேகத் திரைபோல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மழையின் தாக்கம் சற்று குறைந்ததால் நீர்வரத்து கட்டுக்குள் வந்தது. இதையடுத்து ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் நேற்று அதிகாலை முதலே மலைப்பகுதிகளில் மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்ததால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து திடீரென உயர்ந்தது.இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏற்கனவே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த காரணத்தால் மெயின் அருவியில் குளிக்க தடை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க ஆர்வத்துடன் வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதேநேரம் பழைய குற்றால அருவி, சிற்றருவி மற்றும் புலியருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.இதற்கிடையே நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
பாதுகாப்பு காரணங்களால் அங்கு ஆறாவது நாளாகவும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.மேலும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், ஆற்றங்கரைகள், நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், கருப்பாநதி, ராமநதி, கடனாநதி, குண்டாறு உள்ளிட்ட முக்கிய நீர்த்தேக்கப் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் உதவி பெற தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் 1077 மற்றும் 04633-290546 ஆகிய எண்கள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.
English Summary
Flooding Sudden increase water flow Courtallam Aintharuvi Tourists banned from bathing