முதலில் போராட்டம் நடத்த அனுமதி..பின்னர் அனுமதி மறுப்பது ஏன்?..சீமான் கேள்வி!
First permission to hold the protest then why deny the permission? Seemans question
முதலில் போராட்டம் நடத்த அனுமதித்த காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட பிறகு, கூட்டம் நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயம்? என தமிழக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோவில் குடமுழுக்கை தாய்த்தமிழில் நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ் பேரவை இணைந்து வருகின்ற 14-06-2025 அன்று திருச்செந்தூரில் நடத்தவிருந்த அறப்போராட்டத்திற்கு தி.மு.க. அரசு அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
முதலில் போராட்டம் நடத்த அனுமதித்த காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட பிறகு, கூட்டம் நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயம்? யாருக்குப் பயந்து, யாருடைய உத்தரவின் பேரில் காவல்துறை முதலில் வழங்கிய அனுமதியை தற்போது மறுக்கிறது? திருச்செந்தூர் காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய அறமற்றச்செயல், தி.மு.க. ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்குத் தரம்தாழ்ந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. வெட்கக்கேடு!
6 முறை தி.மு.க. தமிழர் நிலத்தை ஆண்ட பிறகும் தமிழ்நாட்டில் இன்றுவரை அன்னைத் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயராகும்.
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி, தஞ்சை பெரியகோவிலில் குடமுழுக்கு நிகழ்வானது தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றோம். நீதிமன்ற ஆணையை அரசு ஏற்று அன்றைய அதி.மு.க. அரசு தஞ்சை பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கினை தமிழ் வழியில் நடத்த ஆவன செய்தது.
அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கரூர் பசுபதீசுவரர் ஆலயக் குடமுழுக்கு குறித்தும் முன்கூட்டியே வீரத்தமிழர் முன்னணியும், தெய்வத்தமிழ் பேரவையும் தமிழ்வழியில் குடமுழுக்கு கோரி மதுரை ஐகோர்ட்டில் முறையிட்டு ,தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோவில்களுக்கும் குடமுழுக்கு நடக்கும்போது தமிழில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதை நிறைவேற்றத் தவறும் கோவில் நிர்வாகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார்கள்.
முத்தமிழ் முருகன் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்திய தி.மு.க. அரசு, தற்போது சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தி, பா.ஜ.க.வின் பீ டீமாக செயல்பட்டு, பிளவுவாத அரசியலுக்குத் துணைபோவது வெட்கக்கேடானது.
ஆகவே, ஐகோர்ட்டு உத்தரவைப் பின்பற்றி திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கை தமிழ்நாடு அரசு தாய்த்தமிழில் நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அறப்போராட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். அனுமதியளிக்க மறுக்கும் பட்சத்தில் தமிழ் மொழிக்காகத் தடையை மீறி கூட்டத்தை நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
First permission to hold the protest then why deny the permission? Seemans question