குடும்ப தகராறு கொலையில் முடிந்தது! மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்...! - காவல்துறையின் அதிரடி நடவடிக்கை...!
Family dispute ends murder Husband kills wife Police take swift action
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்பத் தகராறு முற்றிய நிலையில், மனைவியின் கழுத்தில் கத்தியால் வெட்டிவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய காவலர்கள், தலைமறைவான கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சிவா (30). காசிமேடு பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி வெண்ணிலா (23). இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.சிவாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. குடிபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.கணவரின் தொடர் கொடுமையை தாங்க முடியாமல் வெண்ணிலா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது 3 குழந்தைகளுடன் வியாசர்பாடியில் உள்ள தாய் தேவி வீட்டுக்கு சென்றார்.

அங்குள்ள மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில், நேற்று மதியம் வெண்ணிலா தனது அக்காள் மோகனாவின் வீட்டில் இருந்தார். அந்த வீடு அதே குடியிருப்பில் சி.பிளாக்கில் 3-வது மாடியில் அமைந்துள்ளது.
அப்போது வெண்ணிலாவை சந்திப்பதற்காக சிவா அங்கு வந்தார். வீட்டுக்குள் இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சிவா, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வெண்ணிலாவின் கழுத்தில் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து அவசரமாக தப்பிச் சென்றார்.வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் தேவி மற்றும் அக்காள் மோகனா உடனடியாக வீட்டுக்குள் ஓடிச் சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் வெண்ணிலா உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சிவாவை பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Family dispute ends murder Husband kills wife Police take swift action