முதியோர் இருக்கை ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி...! - சென்னை மெட்ரோக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
end occupation seats reserved elderly High Court issues stern order Chennai Metro
சென்னை மெட்ரோ ரயில்களில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முன்னுரிமை இருக்கைகள் உண்மையிலேயே அவர்களுக்கே கிடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் கூடிய அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
மேலும், வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம், மெட்ரோ ரயில்களில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளை மற்ற பயணிகள் ஆக்கிரமித்து வருவது குறித்து கவலை தெரிவித்தது.

முன்னுரிமை இருக்கைகள் இருந்தும், அவற்றில் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் தகுதியற்ற பயணிகள் அமர்ந்து கொள்வதால், முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் நின்றபடியே பயணிக்க வேண்டிய அவல நிலை தொடர்வதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, மெட்ரோ ரயில்களில் அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னுரிமை இருக்கைகளில் தகுதி இல்லாதவர்கள் அமர்ந்திருக்கிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இடம் வழங்க மறுப்பவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னுரிமை இருக்கைகள் யாருக்கானவை என்பது குறித்து தெளிவாகப் புரியும் வகையில் ரயில்களுக்குள்ளும், நிலையங்களிலும் பெரிய அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு அடிக்கடி அறிவுறுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ரயில்களில் பணியாற்றும் பாதுகாப்பு ஊழியர்கள், ஒவ்வொரு நிலையத்திலும் முதியோர்கள் ஏறும் போதே அவர்களுக்கு இருக்கைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உடல் ரீதியான சவால்களை சந்திக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் அடையாளம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த உத்தரவுகளை மெட்ரோ நிர்வாகம் உரிய முறையில் அமல்படுத்தத் தவறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
English Summary
end occupation seats reserved elderly High Court issues stern order Chennai Metro