குரோம்பேட்டையில் அதிர்ச்சி; பேருந்தில் வழிகேட்டதில் தகராறு; முதியவர் அடித்துக் கொலை..!
Elderly Man Beaten to Death in Chromepet Following Dispute Over Asking for Directions on a Bus
குரோம்பேட்டையில் ஓடும் பேருந்தில் வழி கேட்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள எஸ்.எல். நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (74). மின் பணியாளரான இவர், தாம்பரம் MEPZ பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடபழனி நோக்கிச் சென்ற (70-G) அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, அதே பேருந்தில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான அமர்நாத் என்ற இளைஞர், அந்த பேருந்தில் உள்ள LED திரையில் ஓடிக்கொண்டிருந்த வழித்தட விவரங்கள் குறித்து சந்திரசேகரனிடம் (முதியவரிடம்) கேட்டுள்ளார்.
அதற்கு ஆவர், (முதியவர்) நான் ஏன் உனக்கு வழி சொல்ல வேண்டும்? எனப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த குறித்த இளைஞர் (அமர்நாத்,) முதியவர் சந்திரசேகரனைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கையால் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்த பேருந்தின் உள்ளேயே சந்திரசேகரன் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த சக பயணிகள், அவரை உடனடியாக மீட்டு ஆட்டோ மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சந்திரசேகரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பேருந்தின் நடத்துநர் ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், குரோம்பேட்டை போலீசார் பொது வெளியில் ஆபாசமாகத் திட்டுதல், கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, தலைமறைவாக முயன்ற கட்டிடத் தொழிலாளியான அமர்நாத்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தீவிர விசாரணையின் பின்னர், கொலை குற்றவாளி போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள எம்.ஐ.டி (MIT) மேம்பாலம் அருகே பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Elderly Man Beaten to Death in Chromepet Following Dispute Over Asking for Directions on a Bus