எல்நினோவால் தூத்துக்குடிக்கு ஜாக்பாட்...! 80 சதவீதத்தை எட்டி சாதனை படைத்த உப்பு உற்பத்தி...!
El Nino hits jackpot for Thoothukudi Salt production hits record high 80 percent
தூத்துக்குடி மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலும் சாதகமான இயற்கை சூழலும் கைகொடுத்ததால், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி வேகமெடுத்துள்ளது. இதுவரை சுமார் 80 சதவீத உப்பு உற்பத்தி நிறைவடைந்துள்ள நிலையில், உப்பளங்கள் முழுவதும் வெள்ளை நிறக் குன்றுகளைப் போல் உப்புக்குவியல்கள் காட்சியளிக்கின்றன. ஆனால் உற்பத்தி பெருகிய போதிலும் உரிய விலை கிடைக்காததால் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இத்தொழிலை நம்பி சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்த முக்கிய இடத்தை தூத்துக்குடி பிடித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுவாக ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்தியின் உச்சகட்ட காலமாக கருதப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி சீசன் நிறைவடையும்.
இந்த ஆண்டும் ஜனவரி மாதம் முதலே உப்பளங்களில் பணிகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி படிப்படியாக அதிகரித்தது.வழக்கமாக ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது பெய்யும் லேசான மழை உப்பு உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சந்தையில் உப்பின் விலை ஓரளவு உயர்வது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு எல்நினோ உள்ளிட்ட இயற்கை மாற்றங்களின் தாக்கத்தால் உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவியதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு பகுதியில் இருந்து வீசும் மேல்காற்றும், கடுமையான வெயிலும் ஒருசேர அமைந்து உப்பு உற்பத்திக்கு உகந்த நிலை உருவாகும்போது அதனை உற்பத்தியாளர்கள் ‘கோடை’ என அழைக்கின்றனர். இந்த ஆண்டு அந்த சூழல் சிறப்பாக அமைந்ததால் உப்பு உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.இதன் விளைவாக இதுவரை சுமார் 80 சதவீத உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உப்பளங்கள் எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளை நிற உப்புக்குவியல்கள் குவிந்து கிடக்கின்றன.உப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப விற்பனை விலை கிடைக்காதது உற்பத்தியாளர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
தூத்துக்குடியில் தற்போது தரமான உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் தர உப்பு ஒரு டன்னுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையிலும், இரண்டாம் தர உப்பு ரூ.800 முதல் ரூ.1,000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் குஜராத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவில் உப்பு நேரடியாக விற்பனைக்கு செல்வதால், தூத்துக்குடி உப்புக்கான சந்தை வாய்ப்புகள் குறைந்துள்ளன.
இதன் காரணமாக விற்பனையும் மந்தநிலையில் உள்ளது.இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்ததாவது,"தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி சுமார் 80 சதவீதத்தை எட்டியுள்ளது. இதுவரை சுமார் 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. உற்பத்திக்கு தொடர்ந்து சாதகமான சூழல் நீடித்தால், இந்த ஆண்டு முழுமையான உற்பத்தியை எட்டுவதற்கும் வாய்ப்பு உள்ளது.கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பில் கணிசமான அளவு இன்னும் விற்பனையாகாமல் இருப்பு உள்ளது.
அதேநேரத்தில் புதிய உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் உப்பை சேமித்து வைப்பதற்கான இடவசதியும், விற்பனை வாய்ப்புகளும் சவாலாக மாறியுள்ளன.தூத்துக்குடியில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழக்கமாக நடைபெறும் உப்பு விற்பனை தற்போது குறைந்துள்ளது.
அந்த மாநிலங்களுக்கு குஜராத்தில் இருந்து நேரடியாக உப்பு கொண்டு செல்லப்படுவதால், தூத்துக்குடி உற்பத்தியாளர்கள் சந்தையை இழந்து வருகின்றனர்.இதன் தாக்கமாக உப்பின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் உப்பளத் தொழில் மேலும் நலிவடையும் அபாயம் உள்ளது. எனவே உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தூத்துக்குடி உப்புக்கான சந்தை வாய்ப்புகளை மீட்டெடுக்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
English Summary
El Nino hits jackpot for Thoothukudi Salt production hits record high 80 percent