புதிய தோற்றத்துடன் எழும்பூர் ரெயில் நிலையம் நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு!
Egmore Railway Station to be renovated with new look and modern facilities
சென்னையின் பாரம்பரியத்தைக் கூறும் அடையாளமாக விளங்கும் எழும்பூர் ரெயில் நிலையம், நவீன வசதிகளுடன் மறு சீரமைக்கப்படுகிறது. அதன் பழமையான அழகிய தோற்றம் பாதிக்கப்படாமல், பயணிகள் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே எழும்பூர் ரெயில் நிலையத்துடன் மெட்ரோ இணைப்பு உள்ளது. இப்போது பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் பயணிகள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் விரிவுபடுத்தப்படுகின்றன.
பயணிகள் குறைந்த விலையில் தரமான உணவு பெற ஓட்டல்கள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் பகுதி ஆகியவை உருவாகின்றன. அதேசமயம் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான பல அடுக்கு பார்க்கிங் வசதி கட்டப்பட்டு வருகிறது.
ரெயில்கள் வருகை மற்றும் புறப்பாடுகளுக்காக தரைத் தளம் மற்றும் 3 அடுக்குகளுடன் புதிய கட்டிடம் எழுப்பப்படுகிறது. மேலும், பயணிகள் வசதிக்காக தனித்தனி பிரத்யேக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்குப் பயணிகள் செல்ல சிறப்பு வழியும் ஏற்படுத்தப்படுகிறது.
காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை வழியாக 5 அடுக்கு பார்க்கிங் வசதி உருவாக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிள்கள், கார்கள், ஆட்டோக்கள் ஆகியவை எளிதில் நிறுத்தக்கூடிய வகையில் இந்த பார்க்கிங் அமைக்கப்படுகிறது.
பயணிகள் நடந்து செல்ல உயரமான நடைபாதை, பிளாட்பாரங்களுக்கு மேம்பாலம், எஸ்கலேட்டர், லிப்ட் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைவதும், வெளியேறுவதும் மிகவும் எளிதாகும்.
மேலும், புதிய பார்சல் அலுவலகம், ரெயில்வே மெயில் சர்வீஸ் அலுவலகம், துணை மின்நிலையம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்காக கூடுதல் லிப்ட், எஸ்கலேட்டர், குளிர்ச்சியான குடிநீர் வசதி, கழிவறைகள் ஆகிய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
ரெயில்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நிலையத்தின் வடக்கு பகுதியில் பிரமாண்ட தரைதள குடிநீர் தொட்டி (சம்ப்) கட்டப்படுகின்றது. இதன் மூலம் ரெயில்களுக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
English Summary
Egmore Railway Station to be renovated with new look and modern facilities