கனமழை மற்றும் அதி வேக காற்று : நீலகிரியில் சூழல் சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடல்..!
Eco tourism destinations in the Nilgiris closed due to heavy rain and high winds
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரியில் தொட்டபெட்டா, அவலாஞ்சி உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அங்கு சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை துவங்கி 02 மாதங்கள் பெய்யும். இந்த மழை பொதுவாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்க்கும். கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.
குறிப்பாக, குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாகவுள்ளது. நேற்று மழை சற்று குறைந்த போதிலும், அதிகாலை நேரங்களில் கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்துள்ளது. இன்று காலை (22-ஆம் தேதி) கடும் மேகமூட்டமும், பரவலாக சாரல் மழையும் பெய்துள்ளது.

இதனால், அப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் சிரமப்பட்டனர். இதன் போது முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வருவதால், குளிரும் அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கனமழை காரணமாக தொட்டபெட்டா, அவலாஞ்சி பகுதிகளில் கனமழை மற்றும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் பாரஸ்ட், 08-வது மைல் ட்ரீ பார்க், தொட்டபெட்டா, அவலாஞ்சி, கெய்ர்ன்ஹில் ஆகிய சூழல் சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
English Summary
Eco tourism destinations in the Nilgiris closed due to heavy rain and high winds