தசரா திருவிழா: அதை எடுத்துவர காவல்துறை திடீர் தடை!
Dussehra Festival The police impose a sudden ban on it
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் போது பக்தர்கள் உலோக வேல், சூலாயுதம் கொண்டு வர காவல்துறை தடை விதித்துள்ளது.
தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 2.10.2025 அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும்.
இந்த தசரா திருவிழாவை முன்னிட்டு 23.9.2025 அன்று நடைபெறும் கொடியேற்ற நிகழ்வுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் ஜாதி கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ, ஜாதி ரீதியான பனியன் மற்றும் உடைகளை அணிந்து வரவோ, ஜாதி தலைவர்கள் போன்று வேடமிட்டு வரவோ, காவல்துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டோ வரக்கூடாது.உலோகத்திலான வேல், சூலாயுதம், வாள் போன்ற ஆயுதங்கள் கொண்டு வருதல் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசரா திருவிழாவின்போது தசரா குழுவினர் பக்தி பாடல்களை தவிர சாதி ரீதியான பாடல்களோ, இசையோ இசைப்பதற்கு அனுமதி இல்லை. மேலும் ஏனைய பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் காவலர்களை நியமித்து தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் நடத்திட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Dussehra Festival The police impose a sudden ban on it