சுட்டெரிக்கும் கோடை வெயில்; பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!
Due to the rising summer heat the Department of School Education has issued an order to raise awareness among school students through their parents
தமிழகத்தில் நடப்பு 2025-2026-ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கோடை காலத்தில் பள்ளி மாணவர்களை கவனமுடன் கண்காணித்துக் கொள்ள பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்கள் அதிகளவு தண்ணீர் பருக பெற்றோர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
''தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்குகிறது. மேலும் பருவ நிலை மாற்றத்தினால் இந்த கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எனவே, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதிக வெயில் உள்ள நேரங்களில் குறிப்பாக, பகல் 12 மணி முதல் 3 மணி வரை நேரடி வெயில்படும் திறந்தவெளியினை பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும். இந்நேரங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள் அல்லது விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றை திறந்தவெளியில் நடத்த கூடாது. மாணவ, மாணவிகள் தேவையான அளவு தண்ணீர் பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயணத்தின் போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ் மற்றும் வீட்டில் தயார் செய்த எலுமிச்சைச் சாறு, நீர்மோர், லஸ்ஸி, பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள், குறிப்பாக, நீர்சத்து அதிகம் நிறைந்த பழ வகைகளான தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு பழம், திராட்சை, அன்னாசி, வெள்ளரி, கீரைகள் மற்றும் காய்கறிகளை உண்ணலாம். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பராமரித்தல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
மரங்களில் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பறவைகளுக்கான நீர் கொள்கலன்களை அமைத்து பறவைகள் நீர் அருந்துவதற்கான சூழலை உருவாக்கித் தரலாம். மாணவர்களுக்கு உள்ளரங்க விளையாட்டுகளான சதுரங்கம், கேரம் போன்ற விளையாட்டுகளை மட்டும் விளையாட வாய்ப்பளிக்கலாம். மாணவர்கள் வெளியில் செல்லும் போது குடையை பயன்படுத்திட அறிவுறுத்த வேண்டும்.
மிகை அல்லது அதிக வெப்ப சலனத்தை தவிர்க்க பள்ளி மாணவர்களின் மூலம் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். எந்நேரம், யார் வேண்டுமானாலும் வெப்ப நெருக்கடி மற்றும் வெப்ப சலனம் சார்ந்த சூழலுக்கு ஆட்படலாம். இருப்பினும், குறிப்பிட்ட சிலருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம். இதில் கூடுதல் கவனம் தேவை.
குறிப்பாக, பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், திறந்தவெளியில் பணி புரியும் நபர்கள், மனநல பாதிப்பிற்கு ஆளான நபர்கள், உடல் நலமற்றவர்கள், குறிப்பாக இதயநோய் மற்றும் மிகை ரத்த அழுத்தம் உடையவர்கள், குளிர்வான காலநிலையிலிருந்து, வெப்பமான காலநிலை கொண்ட இடங்களுக்கு இடம் பெயர்பவர்கள் இந்த வெப்ப சலனத்தின் போது வந்தால் அவர்களது உடலானது காலநிலை இணக்கம் கொள்ள குறைந்தது ஒரு வார காலமாவது எடுத்துக் கொள்ளும். எனவே அவர்கள் அதிகமான நீர் பருக வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கான அறிவுரைகள்!
வீட்டில் இருக்கும்போதும், வெளியில் செல்லும்போதும் வெளிர் நிறம் கொண்ட மெல்லிய, தளர்வான, பருத்தியினால் ஆன ஆடைகளை அணிய வேண்டும்.
நேரடி சூரிய ஒளியின் தாக்கம் மற்றும் வெப்ப சலனத்தை தடுக்க வீட்டின் சூரிய ஒளிபடும் பக்கங்களில் பகல் பொழுதில் ஜன்னல்களை திரைக் கொண்டு மூடி வைத்தல், இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீட்டின் உள்நுழைய ஜன்னல்களை திறந்து வைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
நேரடியாக நம் மீது சூரிய ஒளி படுவதை தவிர்க்கும் விதமாக தலையை மூடுதல், குடை தொப்பி குல்லா துண்டு போன்றவற்றை பயன்படுத்தலாம்.
ஏதேனும் வெளி வேலையாக செல்வதாக இருப்பின், காலை மற்றும் மாலை நேரத்தில் அது அமையும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் கட்டாயம் இருப்பின், அந்நாளின் குறைவான வெப்பமுடைய நேரங்களில் செல்லும்படியாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
அன்றாட வானிலை செய்திகளை வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் வாசித்து அறிந்து கொண்டு, அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
English Summary
Due to the rising summer heat the Department of School Education has issued an order to raise awareness among school students through their parents