தொடர் தோல்வி; இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு; தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா..!
All members of the Sri Lanka Cricket Board including the President have resigned
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ஆம் ஆண்டு ஷம்மி சில்வா தேர்வுசெய்யப்பட்டதற்கு பிறகு, தொடர்ந்து 2021, 2023, 2025 என அடுத்தடுத்த ஆண்டுகளிலும் போட்டியின்றி தலைவராக தேர்வானார்.
இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு பின்னர், இலங்கை கிரிக்கெட்டின் கட்டமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் நோக்கத்தில், இலங்கை அரசாங்கம் இஅந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை தற்காலிகமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ஷம்மி சில்வா தலைமையின் கீழ் ஆசிய கோப்பைகளை இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணி வென்றுள்ளனர். ஆனால், ஐசிசி தொடர்களில் மிக மோசமாக செயல்பட்டது. அதைத்தொடர்ந்து தரவரிசை பட்டியலிலும் இலங்கை அணி பெரிய சரிவை கண்டுள்ளது.
இந்நிலையில் வீரர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கை அணியின் மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, நிர்வாகத்தில் மாற்றம் வேண்டும், சில்வாவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற எதிர்ப்புகள் அதிகமாக வந்தன.
இந்த எதிர்ப்புகளை தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை ஷம்மி சில்வா சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து, தேசிய கிரிக்கெட் அமைப்பில் சிறந்த மாற்றம் தேவை என வலியுறுத்தியதால் இலங்கை வாரிய தலைவர் ஷம்மி சில்வா உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இது இலங்கை கிரிக்கெட்டின் கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அநுரவின் அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இடைக்கால நிர்வாக குழு விரைவில் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப்பொறுப்பு விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே வசம் வந்துள்ளது.
English Summary
All members of the Sri Lanka Cricket Board including the President have resigned