பெற்ற தாயை வெட்டிய குடிகார மகன்...! ஆத்திரத்தில் துப்பாக்கியை தூக்கிய தந்தை...! - குடும்பத்திற்குள் நடந்த பயங்கரம்...!
drunken son who killed his own mother father who raised gun anger horror that happened within family
மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மரகதப் பூங்கா பகுதியில் நேற்று மாலை குடும்பத் தகராறு ரத்தக் களரியாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மாலா என்பவருக்கும், அவரது 25 வயது மகன் கேப்டன் பிரபாகரனுக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தகராறு முற்றிய நிலையில், மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் கேப்டன் பிரபாகரன் ஆத்திரமடைந்து தனது தாயை கத்தியால் தாக்கியுள்ளார்.இந்த தாக்குதலில் மாலாவின் இடது கை மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கும் முன்பே, இன்று அதிகாலை பூஞ்சேரியில் உள்ள வீட்டில் மேலும் ஒரு பரபரப்பு அரங்கேறியது. மகன் தாயை தாக்கிய விவகாரம் தொடர்பாக தந்தை சேகர், கேப்டன் பிரபாகரனிடம் கடும் கண்டனம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த சேகர் வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துவந்து மகனை நோக்கி சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பறவைகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் அந்த துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டுகள் கேப்டன் பிரபாகரனின் இரு கால்களிலும் தாக்கியதால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், காயமடைந்த கேப்டன் பிரபாகரனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து மகனை துப்பாக்கியால் சுட்ட சேகரை காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தில் தாய் மீது கத்திக்குத்து, மகன் மீது துப்பாக்கிச் சூடு என அடுத்தடுத்து அரங்கேறிய இந்த சம்பவம் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
drunken son who killed his own mother father who raised gun anger horror that happened within family