திருச்செந்தூர் விவகாரம்: தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு ஏன் பதற்றம் ..? திமுக எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி..!
Minister Ramesh hits back at DMK MLA over Tiruchendur issue
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மாஸ்க் அணிந்துகொண்டு சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டார். வந்தவர் அமைச்சர் என்பதை அறியாமல் அவரிடம் தரிசனம் செய்ய 04 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி கூகுள்-பே மூலம் அதை பெற்ற கோயில் அர்ச்சகர் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து அவர் உள்பட கோயிலில் முறைகேடு தொடர்பாக 05 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலையத் துறையை சாராத அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபுவழியாக சுவாமி தரிசனம் செய்ய உதவி செய்து வருவதாகவும் அவர்களை ஆய்வு என்ற பெயரில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இழிவுபடுத்தியதாக குறிப்பிட்டுள்ளதோடு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சருக்கு கண்டனம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு அறநெறித்துறை அமைச்சர் ரமேஷ் பதிலளித்துள்ளதாவது;
''மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள். தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!'' என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Ramesh hits back at DMK MLA over Tiruchendur issue