நீங்க துடிக்கிறதை பார்த்தா, பின்னணியில் ஊழல் சதி இருக்குமோ? ஒரே போடாக போட்ட டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1933 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட வேண்டிய ஆள்தேர்வை நகராட்சி நிர்வாகத் துறை நேரடியாக நடத்தத் துடிப்பதன் பின்னணியில் ஊழல் சதி இருக்குமோ? என்ற ஐயம் எழுவதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றுக்கு 682 உதவிப் பொறியாளர்கள்,  24 இளநிலைப் பொறியாளர்கள், 257 தொழில்நுட்ப உதவியாளர்கள், 367 பணி ஆய்வாளர்கள், 244 துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1933 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சிகளின் இயக்குனர், குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குனர், சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுகள் அகற்றும் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். 

இந்தப் பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு நேர்காணல்  நடத்தி ஆட்களைத் தேர்வு செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறையின் பணியாளர்கள் கடந்த ஆண்டு வரையிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் மூலமாகத் தான் போட்டித் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பணியாளர் தேர்வாணையத்தை புறக்கணித்து விட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன்  பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க எந்தத் தேவையும் இல்லை. 

நகராட்சி நிர்வாகத்துறைக்கு 1933 பொறியாளர்களை தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு எந்த பணிச் சுமையும் இல்லை. தேர்வாணையத்தை ஒதுக்கி விட்டு, இந்த பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கட்டமைப்பும் நகராட்சி நிர்வாகத் துறையிடம் இல்லை.

அண்ணா பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்வி வழங்குவதற்கான கல்வி நிறுவனம் மட்டுமே. அதற்குத் தேவையான மனிதவளமும், கட்டமைப்புமே அதனிடம் இல்லை. அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்துறை மூலம் நடத்தப்படும் பருவத்  தேர்வுகளின் மதிப்பீடுகள் குறித்தே பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அத்துறை நடத்தும் போட்டித் தேர்வுகளின் மதிப்பீடுகள் எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 

துறை சார்ந்த உயரதிகாரிகளைக் கொண்டு நடத்தப்படும் நேர்காணல் என்பதே தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக செய்யப்படும் ஏற்பாடு தான் என்பதை புரிந்து கொள்வதற்கு சிறப்பு ஞானம் எதுவும் தேவையில்லை.

நகராட்சி நிர்வாகத்துறைக்கான பொறியாளர்களை அந்தத் துறையே போட்டித்தேர்வு நடத்தி தேர்வு செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்ட போதே அதை நான் கடுமையாக எதிர்த்தேன். ஊழலுக்கு வழிவகுக்கும் இந்த முறையை கைவிட்டு, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பொறியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 16.11.2023ஆம் நாள் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். 

ஆனால், அதன்பிறகும் தனது நிலையை மாற்றிக் கொள்ளாத நகராட்சி நிர்வாகத்துறை இப்போது ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிட்டிருப்பதிலிருந்தே அதன் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். நகராட்சி நிர்வாகத்துறையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி வழங்கவும், தங்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களுக்கு பணி வழங்கவும் தான் அந்தத் துறையே நேரடியாக ஆள்தேர்வு நடத்துகிறது என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது.

உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை, அந்த அமைப்புகளே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது; ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறலாம் என்பதால் தான், அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம்  தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மாற்றப்பட்டது. 

ஆனால்,  இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பணியாளர்களை நகராட்சி நிர்வாகத்துறையே  தேர்வு செய்யும் போது, அதில் முறைகேடுகள் நடக்கக்கூடும் என்று நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன.

தமிழக அரசுத் துறைகளுக்கு 1933 பேர் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை நேர்மையாக நடைபெற்றால்,  ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். அதனால் அவர்களின் குடும்பங்களில் விளக்கேற்றப்படும்; அவர்களின் வறுமை தீரும். இத்தகைய உன்னத நோக்கம் கொண்ட இந்த பணி நியமனங்களில் எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. 

எனவே, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 1933 பொறியாளர்களை தேர்ந்தெடுக்க அத்துறை சார்பில் வெளியிடப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும். இந்தப் பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிட்டு, நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Condemn to TNG for Direct Job issue 2024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->